கவிதை என்பது...

கனவுகள் இல்லா வயதில் காதல் மலர்ந்து
துடிக்கும் வயதில் காசை வெறுத்து
வாழும் வயதில் காமம் வென்று
துவளும் பல அவமானம் தாங்கி
விலகி மெல்ல இறை நாடி
மூலாதாரம் மலர்ந்து
தண்டுவடம் சிலிர்த்து
போட்டொளி பூத்து
கடவுள் உணர்ந்து
வாழ்க்கை தெளிந்து
தன்விதியை தானே
விதிக்கும் மேலோனாய்...
ஏன் இவை எல்லாம்
என்ற கேள்வியில்
மெல்ல அடங்கியது 'நான்'..
நேசம் பாசம்
வேஷம் துவேசம் - என
எல்லாவற்றையு வேடிக்கை பார்த்து
சும்மா கிடக்கிறது மனம்...

சில சமயங்களில் கவிதைகளும் எழுதுவதுண்டு...

கதை எழுத சோம்பேறித்தனம், அல்லது பொறுமை இல்லாதவர்கள் தான் கவிதை எழுதுவார்கள் என்று ஒரு எழுத்தாளர் எழுதி படித்திருக்கிறேன். எனக்கு அதில் உடன்பாடில்லை. கவிதை என்பது அடர்த்தியான உணர்சிகள் நிரம்பிய உள்ளங்கை அளவு உலகம்! சில கவிதைகளின் தாக்கத்தில் இருந்து விடுபட சுலபத்தில் முடியாது, சில சமயம் நாட்கள் கூட ஆகலாம்.

எழுத நினைப்பது உண்மையாகவே எழுதுபவர் மனதை ஆழமாக பாதித்திருந்தால், அந்த பாதிப்பு கவிதையின் ஒவ்வொரு வார்த்தையாலும் உள்வாங்கப்பட்டு படிப்பவரின் மனதின் ஆழத்தை சலனபடுத்தும்.

யார் எழுதியது என்று தெரியாத எத்தனயோ கவிதைகள் இன்னும் என ஞாபக கோப்புகளில் இருந்து மறையாமல் இருக்கும் காரணம், அதன் ஆழம்!! இலக்கனங்கள் அல்ல.

ராமாயணம்
தந்தைக்கு
ஆயரம் ஆயரம் மனைவிகள்
ஒருத்திமீதும்
சந்தேகம் இல்லை!
மகனுக்கோ
ஒரே ஒரு மனைவி
ஆயரம் ஆயரம் சந்தேகங்கள்!!


மரங்கள் மராங்கலாய்..
பறவைகள் பறவைகளாய்..
மிருகங்கள் மிருகங்களாய்..
மனிதன் மட்டும்
இதில் எதாவது ஒன்றாய்!


மரத்தை நாமும்
நம்மை மரமும்
அழித்துக்கொள்ள
ஒரு நாள்
எல்லாமும் அழிந்துபோகும்
இந்த கவிதை
வரிகளை தவிர...


இந்த நிமிடம்
நீ என்ன செய்து கொண்டிருப்பாய்
என்று சிந்திப்பதிலேயே
போய் விடுகின்றன
என எல்லா நிமிடங்களும்...


சோகம், சந்தோஷம், காதல், இன்னும் பொழுது போகாததை எல்லாம் கவிதையாய் எழுதினேன்.

நண்பர்களுடன் பேசியாயிற்று..
இன்றைய செய்திகளை புரட்டியாயிற்று..
தொலைக்காட்சி தொடர்கள் சலித்தாயிற்று...
தூங்கமலேயே படுக்கை விரிப்பை
கசக்கியாயிற்று...
கவிதை கூட எழுதியாயிற்று..
சமயம் புரியாமல்
சம்பவங்கள் மட்டும்
வேகமாக கடந்து போகின்றது..
நேரம்தான் நகராமல்
இம்சிக்கிறது...

'பாம்பு' என்ற கவிதை உண்மையில் வேறு வழியே இல்லாமல் சிலர் ஒரு பாம்பை அடித்து கொன்றபோது தோன்றியது!! அந்த கவிதையில், பாம்பு, மனிதன் இரண்டிற்கும் பதில் இந்தியன் பாகிஸ்தானியன், தமிழன் சிங்களவன், என்று எப்படி மாற்றினாலும் பொருந்திவரும்!!

ஆனால் நான் சந்தித்த, பலரால் எழுத்தாளர்/கவிஞர் என்று ஒப்புகொள்ளபட்ட சிலரால் நான் எழுதியவற்றை குறைகள் அற்ற கவிதை என்று ஒப்புகொள்ளபட்டதில்லை!! ஆரம்பத்தில் கவலைபட்டாலும், பின்னர் அதை பொருட்படுத்தியது இல்லை. அவர்கள் சொல்லும் எதுகை, மோனை, சீர் எல்லாம் மரபு கவிதைகளை அலங்கரிக்கட்டும். நம் கவிதைகள் மனதை மட்டும் தொட்டால் போதும் என்று விட்டுவிட்டேன்!!

மரபு கவிதைகளில் வெண்பா உரிச்சீர் இயற்சீர் வேண்டலை வெண்சீர் வேண்டலை இன்னும் ஏதேதோ. இதில் கட்டளை கலித்துறை என்பது நான்கு அடிகள் இருக்கவேண்டும், ஒவொரு அடியும் நெடிலடி என்று சொல்லப்படும் ஐந்து சீர்கள் கொண்டும், இவைகளில் வெண்சீர், இயற்சீர் வெண்டளைகள் கொண்டிருக்கவேண்டும். போததற்கு அடியில் ஒற்று எழுத்துகளை (புள்ளி வாய்த்த எழுத்துகள், க், ச்..) நீக்கி எண்ண பதினாறு எழுத்துகள் இருக்கவேண்டும், முதல் எழுத்து நெடிலாக இருந்தால். குறிலாக இருந்தால் பதினாறு இருக்கவேண்டும். இதை எல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று அந்த பக்கம் போவதில்லை.

மனம் முழுக்க பாரம்தான்
பகிர்ந்துகொள்ள நட்பு வேண்டேன்
இறக்கி வைக்க துணையும் வேண்டேன்
என்னது என்னுளே கரையட்டும்
கரையும் வரை
மடி வேண்டும்
தலை சாய்க்க..

இந்த கவிதையை படித்த பலர் எழுதிவைதுகொண்டு மனதில் பாரமாய் இருக்கும் பொது படிப்பேன் என்று சொன்னபோது எனக்கு கொஞ்சம் கர்வமாக இருந்தது.

தெளிந்த வானம்...
நிறைந்த நிலவு...
மலர்ந்த முல்லை...
இருந்தும்
இரவில் நிறைவில்லை...!
நீ இல்லை..

தியானம்

நன்றி, இன்றும் நான் ஏதும் எழுதி இருகிறேனா என்று பார்த்துகொண்டு இருக்கும் நண்பர்களுக்கு நன்றி.

ஆன்மிகம் பற்றி பேசி நாட்கள் ஆகிவிட்டன, எனவே இன்று தியானம் பற்றி கொஞ்சம் பேசலாம்.

மனதை ஒரு புள்ளியில் ஒருமுகப்படுத்துவது என்று பொதுவாக சொல்லப்படும் தியானம், அப்படியானது அல்ல!! ஏதோ எழுத்து சிதார் ஆனபின் பாலகுமாரன் பேசுவது போல ஆரம்பிகக்கிறேனா!!

சுலபமாக தியானம் கைகூட கற்று தருகிறேன்.

அதற்க்கு முன், உங்களுக்கு தெரிந்திருந்தாலும் தியானத்தை பற்றி சில விசயங்கள்.

தியானம் சற்று ஆழமாக போகும் நிமிடங்களில் உங்களின் சுவாசம் மிகவும் மேலிதாகிறது, அரிதாக சிலசமயம் நின்றுகூட போவதுண்டு. நம் சுவாசத்திர்க்கும் மனதிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. உதாரணதிற்கு, நீங்கள் கோபமாக இருக்கும் சமயங்களில் உங்கள் சுவாசம் நிதானம் இன்றி படபடபாகவும், அமைதியான பொழுதுகளில் லேசாகவும் இருப்பதை பார்க்கலாம்.

ப்ராணாயமம் ஆரம்ப பயிற்சிகள் சுவாசத்தை கட்டுபடுதுவதர்கானது. அவைகளைகொண்டுதான் இன்று பெரும்பாலான ஆசரமங்களின் பிழைப்பு ஓட்டிகொண்டிருகிறது. தினமும் காலையில் சில நிமிடங்கள் நம் சுவாசத்தை கவனித்து அதை ஒரு தாள கதியில் இயக்கிவிட்டால், பெரும்பாலும் அந்த இயக்கம் அந்த நாள் முழுவதும் தொடர்கிறது. இது நம் மனதை நிதானத்தில் வைக்கிறது. நிதானமாக இருக்கும் மனம் தெளிவாக முடிவெடுக்கும். இதே போல் மனதை நிதானத்திற்கு கொண்டுவரும் சூட்சுமத்தை கோயில்கள் உள்ளடக்கி இருக்கின்றன. அது வேறு formula. ப்ரனாயமத்தையும் கோயிலையும் தவிர்த்து தினத்திற்கு வருகிறேன்.

மனதை ஒரு புள்ளியில் நிறுத்துவதென்பது கேட்பதற்கு நன்றாக இருக்குமோ தவிர, செய்வதற்கு முடியாதது.

எனவே முதலில் எங்கெங்கோ அலைபாயும் நம் மனதை நம் உடலில் நிறுத்தும் பயிற்சியில் ஆரம்பிக்கவேண்டும்.

சௌகர்யமாக மல்லாக்க நீட்டி படுதுகொல்லுகள் (இதற்க்கு சுகாசனம் என்று பெயர், யோகாசனம் கற்றவர்கள் சுகாசனம் அப்படி அல்ல என்று சொன்னால் அதை காதில் வாங்கிகொல்லாதீர்கள்) கை கால்களை தளர்திகொளுங்கள். எந்த அசௌகரியமும் இருக்ககூடாது.

கண்களை மூடிக்கொண்டு உங்கள் கால் கட்டை விரல் எப்படி இருக்கும் என்று மனதிற்குள் பாருங்கள். விரல், நகம், உள்ளே எலும்பு, சதை, நரம்பு, இப்படி கொஞ்சம் ஆழமாக பாருங்கள். இதற்க்கு அனாடமி எல்லாம் படிக்க வேண்டாம், உங்களுக்கு தெரிந்தவரை உள்ளே செல்லுங்கள். இரண்டு கால்களின் கட்டை விரலில் ஆரம்பித்து பாதம், கண்ணுகால், முழங்கால், தொடை, என்று அப்படியே தலை முடி வரை நிதானமாக உங்களை நீங்களே scane செய்வது போல பாருங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறும், பெரும்பாலும் தூங்கிவிடுவீர்கள் கொஞ்சமாய் சிரத்தை எடுத்தால் நிச்சயம் முடியை தொட்டுவிடலாம்!

முடியை தொட்டதும் நீங்கள் உங்களின் உடலுக்குள்ளே தங்கியிருப்பதை உணரமுடியும்.

இந்த பயிற்சியால் நிகழும் இனொரு நிகழ்வையும் சொல்லிவிடுகிறேன். நாம் மனதால் நம் உடலை பார்க்கும் இடத்தில் ரத்தம் அதிகம் பாய்கிறது. இன்னும் நுணுக்கமாக சொல்லவேண்டுமானால், நாம் பார்க்கும் பகுதியில் இளஞ்சூடு உருவாகி நரம்புகளை லேசாக விரிவடைய செய்கிறது. ரத்தம் அதிகம் பாய்கிறது. இதனால் நரம்பு, இதயம் சம்பந்தமான வியாதிகள் நம்மை நெருங்காது. சில மகான்கள் தம் பார்வையாலேயே அடுத்தவர் உடலில் இப்படி மாற்றங்களை நிகழ்த்துவார்கள். அது வேறு பயிற்சி!! நோக்கு வர்மம் பற்றி தேடினால் அது புரியும்.

நண்பர்களே, இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து சுலபமாக உங்களின் உடலில் மனதை நிறுத்தும் வித்தையை சாதிய படுத்திய பின் அடுத்த தளத்தை காட்டுகிறேன்

வாசியுங்கள் நண்பர்களே...

புதிதாக ஜன்னலை திறக்கின்றேன், கதவை திறக்கின்றேன் என்றெல்லாம் சொன்னது வெறும் பிரசவ வைராகியம் ஆகிவிட்டது...
இனி இப்படி தினப்படி எழுதுகிறேன் என்றெல்லாம் வாக்கு குடுப்பதாக இல்லை...
நான் சொன்னது போல் எழுத மட்டும்தான் இல்லை, தவிர சொன்னபடி புத்தகங்களை படிப்பதை பழையபடி ஆரம்பித்துவிட்டேன் - இது இனி எத்தனை நாள் என்று நினைக்கவேண்டாம்..!!

படிப்பதை உங்களுக்கும் வழிமொழிகிறேன். அனைவரும் கண்டிப்பாக புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை வளர்த்துகொளுங்கள். கிடைப்பதை படியுங்கள். இன்னது என்று தேடாதீர்கள், நீங்கள் பசியுடன் படிக்க ஆரம்பித்தலே போதும், உங்களுக்கான புத்தகங்கள் உங்களை தேடிவரும். நம்புங்கள், என அனுபவத்தில்தான் இதை சொல்கிறேன்.

படிக்க நேரம் இல்லை என்று சொல்ல்பவர்களின் தலையில் குட்டுங்கள். நீங்கள் பேருந்தில் பயணிக்கலாம், எங்கேனும் எவருக்கேனும் காத்திருக்கலாம், ஒரு டிவி சீரியலை தியாகம் செய்யுங்கள், முடியாவிட்டால் விளம்பர இடைவேளையில் படிங்கள், தினம் இரவு அரைமணிநேரம் தூக்கத்தை தள்ளி போடுங்கள். நான் toilet கு கூட புத்தகத்தை எடுத்துசெல்கிறேன், படிக்கும் புத்தகம் என்பது சரஸ்வதி என்றெல்லாம் சொல்லும் எனக்கு வாயதாற்போல் மனைவி வாய்த்திருந்தால், இந்த விசயத்தில் அவர்கள் பேச்சை கேட்காத bad pussycat ஆகா இருந்துவிடுங்கள்!

அப்படி இப்படி என்று கண்டிப்பாக உங்களால் ஒரு நாளில் அரைமணி நேரமாவது ஒதுக்க முடியும். கண்டிப்பாக படிங்கள்.

இப்போது நான் படித்துகொண்டிருப்பது மதன் எழுதிய கி.பி. கி.மு. - இந்த புத்தகத்தை ....ம்ம்ம் படிக்கலாம்.

கிறுக்கல்கள்...

ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் இல்லை என் மகளுக்கு. பத்து மாத தளிர். இன்று ஞாயிறு, இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்ற நினைப்பு அவளின் விழிப்பால் தடைபட்டது. சமீப காலமாக நித்ராதேவி என் மீது அதிகம் காதலுடன் அலைவதாகப்படுகிறது. இருந்தும் இன்னும் அவளுடன் மட்டுமே குடும்பம் நடத்த எனக்கு உடன்பாடில்லை. எப்போதும் போல் என மகள் ஆறு மணிக்கே எழுப்பிவிட்டாள். என்னை தட்டி தட்டி, 'ப்பா ப்பா ப்பா ப்பா......' என்று ராகம் பாடினாள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் ' ...' மற்றும் ' ...' என்ற ஜண்டைவரிசைதான்...

முன்பெல்லாம் நிறைய படித்துகொண்டிருந்தேன். எப்போதும் ஒரு புத்தகம் கையில் இருக்கும். பேருந்து பயணத்தில், யாருக்கேனும் காத்திருக்கும் நேரங்களில், கம்பெனியில் சும்மா இருக்கையில், ஊரே மெட்டி ஒலி பார்துகொண்டிருகையில், கழிவறையில்கூட வாசிப்பு தொடர்ந்துகொண்டிருக்கும். ஒரு புத்தகம் முடிந்தால் உடனே அடுத்து. இன்னது என்று இல்லை. 'திருமந்திரம்' படித்தவுடன் இந்திரா சௌந்தரராஜனின் 'கிருஷ்ணா தாசி', அது முடிந்ததும் அண்ணா (இது வேறு அண்ணா!) எழுதிய 'பகவத்கீதை உரை', பின் சாருநிவேதிதாவின் 'ஜீரோ டிகிரி'ஓஷோ வின் 'கிருஷ்ணா', 'ஒரு கோப்பை தேநீர்', சுஜாதாவின் 'நில்லுங்கள் ராஜாவே', இன்னும் பாகவதம், தம்மபதம், இன்னும் இன்னும்............

அபோதெல்லாம் நிறைய நேரம் இருந்தது. இப்போது எங்கே போனது நேரம்!!!

ஒரு நிறுவனத்தில் பனி செய்துகொண்டிருந்தேன். Maintenance. ஏதேனும் சிக்கலான பழுதிருந்தல் மட்டும் அழைப்பு வரும். மற்றபடி அன்றாட பணிகள் எனக்கு கீழ் உள்ள ஊழியர்களால் செய்யப்பட்டுவிடும். படிப்தற்கு நிறைய நேரம் இருக்கும். மாலை வீடு வந்துவிட்டால் நான் வேறு நிறுவனம் வேறு!!!

இன்று... சுய தொழில்... அலுவலகத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனம் அதையே யோசித்துகொண்டிருகிறது. அடுத்து என்ன... அந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு... இவர்களுக்கு என்ன பதில்... என்று எபோதும் மனம் சலனமாகவே இருக்கிறது!!! ஒரு ஆனந்தவிகடன் படிப்பதற்கே ஒரு வாரம் தேவைப்படுகிறது!!

இதில் வலைபூவில் எழுதுவது பெரும்பிராயத்தமாகிறது!! நிறைய பகிர்ந்துகொள்ள ஆவல், அதுவும் ஆன்மிகம். அது ஒரு கடல். ஆனால், அதன் கரையை தழுவும் அலையில் கால் நினைத்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே இங்கு பலர்க்கு ஓங்கி நிற்கின்றது.

இன்னும் கூட ஆழமாக போகலாம் என்றால், உடன் வர யாரும் தயார் இல்லை!! விருப்பம் இல்லையா, துணிவில்லையா என்று தெரியவில்லை. நித்யனன்தவை படித்தார்கள், ஆனால் மாயையை பற்றி படிக்க கூட ஆள் இருக்கவில்லை. எங்கு தவறு என்று புரியவில்லை.

இந்த அவசர யுகத்தில் எப்போதேனும் ஒரு பக்கம் மட்டும் எழுதும் என் தவறுதான் காரணமோ!?!?!?

இனி தினசரி படிப்தற்கு ஒரு மணிநேரமாவது ஒதுக்குவது, எழுதுவதற்கு அரைமணியாவது ஒதுக்குவது என்று (நாளை முதல் சூரிய நமஸ்காரம் செய்வது, காலை பிரம்ம முகூர்ததில் எழுவது, கால் மணி நேரமாவது பிராணாயாமம் செய்வது என்று தினமும் சபதம் எடுப்பது போல் அல்லாமல்!) முடிவு செய்திருக்கிறேன்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கும் கூட்டம், 'செம்மொழி மாநாடு' சூன் 23 - 27 என்று எல்லா இடத்திலும் விளம்பரம் செய்தபோது, அது என்ன சூன்!! ஜுன் என்றால் என்ன குறைந்துவிடும்!! அதை செம்மையாக ஆனி 9 - 13 என்றால் இன்னும் அழகாக இருக்குமே!!! என்றெல்லாம் என்னுள் தோன்றியதை இரண்டு வரிகளில் எழுத இந்த டைரியில் ஒரு இடம் தேவைப்பட்டதால் சின்னதாக ஒரு அலமாரியை திறந்திருக்கிறேன். இனி அதில் தினசரி குப்பைகளை திணிக்கலாம் என்றிருக்கிறேன்.

செய்திகள்...

இன்று தினமலர் நாளிதழில் வந்த ஒரு செய்தியில் கொஞ்சம்....

.........விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்து நின்னையூரைச் சேர்ந்தவர் சின்னபையன். இவர், சின்னப்பிள்ளை என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1972 ம் ஆண்டு சின்னப்பிள்ளையை விட்டு, சின்னப்பொண்ணு என்பவரை திருமணம் செய்தார். சின்னப்பிள்ளை, சின்னபொண்ணு இரு தரப்பினரிடையே சொத்து தகராறு ஏற்பட்டு, இது தொடர்பான வழக்கு தற்போது கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் தாக்கிகொண்டனர். இதில், சின்னபிள்ளையின் அண்ணன் சின்னசாமியின் மகன்..........

சின்னபிள்ள தனமால்ல இருக்கு....

சாமி'யார்'.....?!?!?

இன்னமும் நித்யானந்தம்-ரஞ்சிதாவின் மாஸ்டர் CD கிடைக்குமா என்று ஒரு கூட்டம் ஒரு பக்கம் அலைந்துகொண்டு இருக்கிறது. என் நண்பன் ஒருவன் 250 ருபாய், CD வந்திருச்சு என்கிறான். இன்னொருபக்கம், 'முக்தி தரிசனம்' என்று கல்கி கூவி அழைக்கிறார். சத்தம் போட்டால் சாமி ஓடிவிடும் என்னும் ஈசான்ய ஆஸ்ரமம். பெண்களின் ஓட்டு வங்கியை கையகபடுத்தி இருக்கும் பங்காரு. எலுமிச்சை முதல் எட்டு-வட சங்கிலிவரை காற்றிலேயே வரவழைக்கும் புட்டபர்த்தி. இவர்கள் போக உள்ளூரிலேயே அங்கங்கு தென்படும் சுருட்டு சாமியார், அழுக்கு சாமியார், கோமண சாமியார், மற்றும் பலர். இதுவும் அல்லது தேவையான போது மட்டும் வந்து இறங்கும் மாரியம்மன், முருகன், காளி, ஐயனார் சாமி, முனீஸ்வரன், கருபண்ண சாமி - என்னிடம் ஒருவர் தன் மேல் கருபண்ண சாமி வரும் என்றார், நானும் 'வர சொல்லுங்களேன்' என்றேன். அதற்கு அவர் ' எல்லா சமயமும் வரமாட்டார், ஒரு கோட்டர் பாட்டில் உள்ள விட்டாதான் வருவார்' என்றார்!!!!

இவர்களுக்கு மத்தியில் வாழும், தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று நம்பும் சாமான்யர்களுக்கு 'சாமி'யார் என்பதை பற்றி சொல்லியாகவேண்டும்.

மனக்கட்டுப்பாடு, தியானம், சுவாச பயிற்சி இத்யாதிகள் முதல் மோச்சம் வரை(!) கட்டணம் வசூலித்து கற்றுத்தரும் முறை சமீப காலங்களில்தான் பார்க்க முடிகிறது!! 25 வருடங்களுக்கு முன்புகூட இப்படி இல்லை!! ஆன்மிகத்தை பற்றி என்ன நினைத்துகொண்டு இருகிறார்கள் இந்த பித்தலாட்டகாரர்கள்!!! துறவு என்ற வார்த்தையின் அர்த்தத்தையே துறந்துவிட்ட துறவிகள் அல்லவோ இவர்கள்!!!! இன்றைய தலைமுறைகளால், இவர்கள் போலிகள் என்று அறுதியிட்டு பார்க்க முடியாமல்போன காரணம் என்ன?!

நல்ல வழிகாட்டி இல்லை!! அன்று கிருஷ்ணன் மாடு மேய்த்தான், நபிகள் ஆடு மேய்த்தார், கிறிஸ்து ஆடு மேய்த்தார், அனால் இன்று மேய்பார் இல்லாது ஆடுகளும் மாடுகளும் ஒவ்வொரு பக்கம் திரிகின்றது!! அன்று விவேகானந்தர் கேட்ட போதே 100 இளைஞர்களை கொடுத்திருந்தால் இன்று ஒரு விவேகானந்தரை தேடவேண்டிய அவசியம் இருந்திருக்காது!!! நடந்ததை பற்றி பேசி பயனில்லை, இனி ஆவதை பார்ப்போம்.

இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம் போன்ற படிப்புகள் சொல்லிதர ஆசிரியர்கள் இருகிறார்கள், அந்த ஆசிரியர்கள் அந்த பாடத்தில் தேர்ந்தவர்கள்தான, அவர்கள் சொல்லித்தருவது சரிதான என்று சரி பார்க்கவும் வழிகள் இருக்கின்றன. ஆனால், ஆன்மிகம் என்பது முற்றிலும் வேறானது, ஆயிரம் புத்தகங்கள் படிப்பதாலும், பூஜைகளாலும், யாகங்களாலும், பக்தியாலும் எல்லாம் மட்டும் அந்த பரபிரம்மம் என்னும் சமுத்திரத்தின் ஒரு துளியைகூட சுவைக்க தகுதியை தருபவை அல்ல. இவைகளை தாண்டிய அர்ப்பணிப்புதான் நம்மை அந்த பிரம்மதிடம் எடுத்துசெல்கிறது. அதுவே சரணாகதி.

மனம், புத்தி, காயம் இவை மூன்றும் இணைந்து சிரத்தையுடன் செய்யும் முயற்சியால் மட்டும் அந்த ஜோதியை நெருங்க முடியும். அதை நெருங்கியவர்களுக்கு இந்த லௌகிக உலகின் அசைவுகள் அசைக்காது. அப்படிபட்டவர்களின் அனுபவம்தான் அந்த பரமாத்மாவிடம் செல்லும் பாதையை நமக்கு அடையாளம் காட்டும். ஆனால் அத்தனை சீக்கிரத்தில் அவர்களின் அனுபவங்களை நாம் அறிந்துகொள்ள முடியாது. காரணம், அவர்கள் பற்று அற்றவர்கள். அவர்களுக்கு, மண்ணாங்கட்டிகும் தங்கக்கட்டிகும் வித்தியாசம் இல்லை. உங்களுக்கு எதையும் சொல்லிதரவேண்டும் என்ற அவசியமும் அவர்களுக்கு இல்லை. அப்படிபட்டவர்களை தங்கள் குருவாக அடைய அந்த காலங்களில் அவர்களுக்கு பின்னாலேயே அலைந்து, பல சேவைகள் செய்து, அவர்களின் அன்பிற்கு பாத்திரமாகி முக்தி அடையும் மார்க்கத்தை போதனையாக பெற்றார்கள். பிரம்ம ரகசியம் உணர்ந்தார்கள். இப்படிப்பட்ட ஆசான்களின் கால் தூசிக்கு ஒப்பாவார்களா, இன்று காவி போர்வைக்குள் ஒளிந்துகொண்டு தன்னையே கடவுள் என்று சொல்லிகொள்பவர்கள்!!!

இங்கு நான் நித்யானந்தாவை மட்டும் மனதில் வைத்துகொண்டு பேசவில்லை, புட்டபர்த்தி சாய்பாபா, கல்கி, பங்காரு அடிகளார் போன்றவர்களையும் சேர்த்தே சொல்கிறேன். ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டு இருக்கும் பிரேமானந்தாகூட இன்னும் துறவறத்தை(!!) துறக்கவில்லை. இன்றும் அவருக்கு பக்தர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்த பக்தர்கள் சொல்லும் காரணம் 'குருவின் அருளால்தான் இன்று என் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது...' இன்னும் அவரால் இந்த அதிசயம் நிகழ்ந்தது, அந்த ஆச்சர்யம், பல பல கதைகள் அவர்களிடம் இருக்கும். அவைகள் அத்தனையும் பொய் என்று நான் சொல்லமாட்டேன். அப்படி நிகழ்வதற்கும் சாத்தியங்கள் உண்டு. ஆனால் அதற்க்கு அந்த குரு எனும் சாதாரண மனிதன் காரணம் அல்ல என்பதை உணருங்கள் மக்களே. இன்னமும் முன் செல்லும் ஆட்டின் வாலை முகர்ந்து பின்னாலேயே செல்லும் செம்மரிஆடாக இருக்காதீர்கள்.

மெய் பொருள் காண்பது அறிவு.

ஒரு மாங்கொட்டையை புதைத்து வைக்கிறேன். சில வருடங்களில் அது பெரிய மரமாக, வேர், இலை, கிளை, பூக்கள், காய்கள், கனிகள் என்று வளர்ந்து நிற்கிறது. இப்போது கேட்கிறேன், நான் புதைத்துவைத்த அந்த விதை இந்த மரத்தில் எங்கே உள்ளது? பதில் சொல்ல முடியுமா? நீர், சூரிய ஒளி, காற்று, மண் என்று இத்யாதிகள் கூட அந்த விதை, மரமாக காரணமாக இருக்கலாம், ஆனால் இந்த மரத்தின் ஒவ்வொரு துகளிலும் அந்த விதையின் சாரம் இருப்பதை மறுக்கமுடியுமா?

அப்படிதான் கடவுளும்...

'தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான்' என்று பிரகலாதன் கூரியதை ஏதோ விஜய் பட பஞ்ச் டயலாக் என்று உதாசீனப்படுத்தவேண்டாம்.

பிரபஞ்சம் என்பதை பற்றி முன்பு குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவு கூறுகின்றேன். அதன்படி, உயிர் உள்ள உயிர் அற்ற என அனைத்தினுள்ளும் அந்த பிரமத்தின் சாரம் இருக்கிறது. உம்முள், எம்முள் என எங்கும் பிரம்மம் நிறைந்துள்ளது. எதிரில் இருக்கும் மனிதனை அந்த பிரம்ம ஸ்வரூபமாக பாவித்து மனமுருகி வேண்டினால் நிச்சயம் நன்மைபயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படிதான் பெரும்பாலான சாமியார்கள் பிழைப்பு நடத்துகிறார்கள். உங்கள் வீட்டு நாய்குட்டி கூட அந்த பிரம்மம்தான், அதனிடம் உங்கள் குறையை சொல்லிபாருங்கள், கண்டிப்பாக பாதிக்குமேல் பலிக்கும்!!! அதற்காக அந்த நாய்குட்டி தன்னை கடவுள் என்று சொல்லிகொள்ளாது, ஆனால் மனிதன் சொல்லிகொள்வான், அவனுக்குத்தான் ஆறு அறிவு!!!

சித்து வேலைகள்!! சில சாதகங்கள் செய்தால் சித்துகள் கைகூடும். யோக பாதையில் கிடைக்கும் ஒரு சின்ன கைதடி அது. அதை பயணம் செய்ய பயன்படுத்தவேண்டும் அன்றி, சிலம்பாட்டம் ஆடி கூட்டம் சேர்க்க பயன்படுத்த கூடாது. செய்தால், பயணம் அத்துடன் நின்றுவிடும்!! இவைகள் அற்ப விசயங்கள் என்பதை சொல்வதற்கு இங்கு ஆள் இல்லாததால்தான் இவர்கள் இத்தனை ஆட்டம் போடுகிறார்கள்!! தயவு செய்து புரிந்துகொளுகள் மக்களே.

கந்துக மதக்கரியை
வசமாய்
நடத்தலாம்
கரடிவெம்
புலிவாயையும்
கட்டலாம்
ஒரு சிங்கம்
முதுகின்மேற்
கொள்ளலாம்
கட்செவி
எடுத்தாட்டலாம்
வெந்தணலி
லிரசம்வைத்
தைந்துலோ
கத்தையும்
வேதித்து
விற்றுண்ணலாம்
வேறெருவர்
காணாமல்
உலகத்
துலாவலாம்
விண்ணவரை
ஏவல்கொளலாம்
சத்ததமும்
இளமையோ
டிருக்கலாம்
மற்றொரு
சரீரத்தி
னும்புகுதலாம்
சலமேல்
நடக்கலாம்
கனல்மே
லிருக்கலாம்
தன்னிகரில்
சித்திபெறலாம்
சிந்தையை
அடக்கியே
சும்மா
இருக்கின்ற
திறம்
அரிது.

-
தாயுமானார்.

......அப்படிப்பட்டவர்களை காண்பது அதனினும் அரிது!!

மனிதம் தொலைந்த மனிதர்கள் - மறதி...

இந்த பகுதியில் அரசியலை பற்றி பேசகூடாது என்று எண்ணி இருந்தேன். மாயை, மந்திரஜபம் என்று இருந்துவிடலாம் என நினைத்திருந்தேன். ஆனால், இன்று நடக்கும் அரசியலை நினைத்தாலே, அசிங்கத்தை மேலே பூசியதைபோல ஒரு வித அருவருப்பை உணர்கிறேன். இருப்பினும் அந்த சாக்கடைக்கு மத்தியில்தான் நானும் வாழ்கிறேன் என்பதால் அதையும் கிளறதான் வேண்டியுள்ளது.

உணர்சிவசபடுவதில் நமக்கு இணை நாமே! அறிவுபூர்வமாய் எதையும் சிந்திபதென்பது வெறும்வயிற்றில் வேப்பெண்ணை சாப்பிடுவதுபோல.

நித்யானந்தா, கல்கி போன்றவர்கள் தவறு செய்தால்மட்டும் இத்தனை வன்முறை காட்டும் நமக்கு, கண்கூடாக அரசியல்வாதிகள் செய்யும் அக்ரமங்களுக்கு ஒரு சதவீதம்கூட ஆவேசபடாதது ஏன்?

இந்த போலிசாமியர்களால் பாதிக்கபடுவது அவர்களை நம்பி செல்லும் பக்தர்கள்தான் தவிர மற்றவர் இல்லை, ஆனால் நீங்கள் விலகியே இருந்தாலும் அரசியலில் இருபவர்களின் சுயநலனிற்காக அடித்தட்டு கடைகோடி பிரஜைவரை பாதிக்கவடுவதை யாரும் உணர்வதே இல்லை!!

பாலம் கட்டுவதிலிருந்து பள்ளிகூட ஆய நியமனம் வரை அனைத்திலும் ஊழல் லஞ்சம் என்று வாங்கி வெளிநாட்டு வங்கிகளில் பூட்டி வைத்திருகிறார்கள், அவர்களின் எள்ளு பேரனின் கொள்ளு பேரன் வரை உட்கார்ந்து சாபிட்டாலும் தீராத அளவு சொத்துகளை!!!

இவர்கள் போடும் எச்சில் எலும்புக்காக உயிரை கொடுக்கும் (எடுக்கும்) அடியாட்கள் படை வேறு!!!

ஊழல் செய்யும் அதிகாரியோ அல்லது அரசியல்வாதியின் வீட்டை நொருக்குங்களேன், உங்களின் வீரத்தை மெச்சுகிறேன்...

'அமைதிப்படை' திரைபடத்தில் ஒரு அண்ட்ராயர் சண்டையில் அனைத்தையும் மறந்துவிடுவதுபோல எல்லாவற்றையும் மறந்துவிடும் வேடிக்கை மனிதர்கள் நாம்!!!

கச்சதீவை மறந்தோம், காவேரியை மறந்தோம், முத்துக்குமார் மறந்தோம், ஸ்பெக்ட்ரம் மறந்து, இலங்கை அப்பாவி தமிழர்கள், ராமேஸ்வரம் மீனவர்கள், ஒகேனக்கல், முல்லை பெரியார், பிரபாகரன், விலைவாசி, மின்தடை, சரத்பவார், அஜீத்தின் ஆதங்கம் வரை மறந்துவிட்டோம். அடுத்த பெனாகரத்தில் இந்த நித்தியானந்தம் மறந்து, எந்திரன் வந்ததும் எல்லாமும் மறந்துவிடும்!!!!!!!

வாழ்க ஜனநாயகம்.....

மாயை - பகுதி 4

இந்த்ரியங்கள்... பொய்யான உண்மைகள்...

எண் ஜான் உடம்பில் சிரசே பிரதானம். காரணம், மூளை மட்டுமே அல்ல, ஐந்து புலன்களில் நான்கு புலன்கள் தலையில் இருபதாலும்தான்.

முன்பு சொன்னது போல இந்த புலன்கள்தான் அதிகாரிகள், இவைகள் காட்டும் உலகத்தைதான் நாம் பார்க்கிறோம், உணர்கிறோம், சிந்திக்கிறோம். புலன்கள் சொல்வது எல்லாம் உண்மையானவையாக இருக்கவேண்டும் என்று நிர்பந்தம் இல்லையே!!

நம் கண்ணை எடுத்துகொள்வோம், நாம் காண்பவை எல்லாம் மூளைக்கு பிம்பங்களாக நேரடியாக கொண்டுசெல்லப்படுவதில்லை. கண்ணின் திரையில் விழும் பிம்பங்கள் வேறொரு அலைவரிசையாக மாற்றப்பட்டு, நரம்புகள் மூலமாக மூளைக்கு கொண்டுசெல்லபடுகிறது. அங்கு நரம்புகள் கொண்டு வரும் சமிக்ஞைகளை கொண்டு காட்சிகள் புரிந்துகொள்ளபடுகிறது.

நம் பார்வைக்கு சில எல்லைகள் உண்டு. நம் கண்கள் காணும் எல்லாவற்றையும் சமிக்ஞைகளாக மாற்றுவதில்லை. நமக்கு தெரிந்து புறஊதா, எக்ஸ்-ரே போன்ற ஒளிகற்றைகளை கண்டுகொள்வதில்லை. இவைகள் தவிர மனிதனால் இன்னும் கண்டுபிடிக்கபடாத எத்தனை ஒளிகற்றைகள் இருக்கின்றனவோ!!

இது ஒரு புறம் இருக்கட்டும். Video Glass என்ற ஒரு வஸ்துவை பற்றி படித்ததுண்டா? பெரும்பாலும் இது Video Game விளையாட பயன்படுகிறது! அதை அணிந்துகொண்டால் நாமே அந்த விளையாட்டு தளத்திற்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். நம் கண்களை வேறு ஒரு கோணத்தில் சிந்தித்து பார்ப்போம். கண்கள் நமக்கு நிரந்தரமாக பொருத்தப்பட்ட Video Glass என்றால், இங்கு நம் கண்முன்பு நிகழும் நிகழ்வுகள் எல்லாம் முன்பே program செய்யப்பட்டவை என்று வைத்துக்கொண்டால்! இப்போது நாம் பார்த்துகொண்டு இருப்பது எல்லாம் நம் மூளைகுள்ளேயே இருக்கிறது என்றாகிறது!! நம் எதிரே இருக்கும் பிம்பங்கள் எல்லாம் உண்மையில் எதிரே இல்லை, நமகுள் இருக்கிறது. திருமந்திரத்தில் ஒரு இடத்தில், 27 நட்சத்திரங்களும் நம் தலைக்குள்தான் இருக்கிறது என்று திருமுலர் சொல்கிறார். இன்னும் வேதத்தில், அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது எல்லாம் அண்டத்தில், என்று வருகிறது. அதன் அர்த்தகளை இந்த கோணத்தில் சிந்தித்து பார்த்தல் எல்லாம் பொருந்தி வரும்!!

நிறைய குழப்பிவிட்டேனா?

குழம்பியவர்கள் இதை இத்துடன் நிறுத்திவிட்டு, PJ-யின் Lemon Tea ஐ ருசித்துகொண்டே கண்கள் மூடிகொண்டு பாலமுரளியின் எந்தரோ மகானுபாவுலு வோ, Michael Cretu இன் Mea culpa, Sadness யோ ரசியுங்கள், Iman maleki இன் ஓவியங்களை ரசியுங்கள், பாரதியின் 'கண்ணமா என் காதலி' ஐ படியுங்கள், மனம் நிதானத்திற்கு வந்தபின் மீண்டும் முதல் அத்தியாயத்தில் இருந்து ஆரம்பியுங்கள்.

குழப்பம் இல்லாதவர்கள் Video Glass இல் இருந்து தொடரலாம்...

நம்
கண்களை Video Glass என்று நான் சொல்வதற்கு சில சந்தேகங்களும், சாத்தியங்களும் இருக்கின்றன. முதல் சந்தேகம், நாம் பார்க்கும் காட்சிகள் எல்லாம் சரிதானா என்று ஒப்பிட்டு பார்க்க எந்த அளவுகோலும் இல்லை, அப்படி ஒரு அளவுகோலை பற்றி நாம் இதுவரை சிந்தித்ததும் இல்லை!! சிந்திக்கும் சாத்தியங்களும் இருந்திருக்கவில்லை!!! அப்படி ஒரு அளவுகோல் பற்றி சிந்தித்தாலும் அதற்கு சாத்தியம் இல்லை. காரணம், அதையும் இதே கண் கொண்டுதான் பார்க்கவேண்டும், இது குற்றவாளியே நீதிபதியாக இருக்க சொல்வதற்கு சமம்!!

அடுத்து, காணும் காட்சிகளை உருவாக்கும் சாத்தியங்கள்!

Schizophrenia போன்ற மனநோயாளிகளுக்கு ஏதேதோ பின்பங்களும், யாரோ பேசுவது போன்ற சப்தங்களும் கேட்குமாம். அவை எப்படி நிகழ்கின்றன!?

அந்த
உருவங்கள் வெளியே இல்லை, அவர்களுக்குள்ளேதான் உருவாக்க படுகின்றது. அவ்வளவு ஏன், கனவுகளில் வரும் உருவங்களை கண்ணால் காண்கிறோமா? மனதால் காண்கிறோமா என்று யோசித்து பாருங்கள்.

கண்களால் குறிப்பிட்ட அலைவரிசைக்குள் இருக்கும் ஒளிகதிர்களை மட்டுமே பார்க்கமுடியும், புற ஊதா, எக்ஸ்-ரே போன்றவை நம் சாதாரண கண்களுக்கு புலப்படாதவை. இதில் ஒன்றை மனதில் வைத்துகொள்ளுங்கள், இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கபட்ட கண்ணனுக்கு தெரியாத இவைகளை தவிர இன்னும் மனிதனால் கண்டுகொள்ளபடாத பல ஒளி அலைகள் இருக்கலாம். அப்படியொரு பரிணாமத்தில் வேறு ஒரு உலகமே நம்மை சுற்றி இயங்கிகொண்டிருக்கலாம். தேவலோகம், நரகம், கைலாயம், வைகுண்டம், போன்றவை நம்மை சுற்றியிய எங்கேனும் இருக்கலாம்!!! (தேவர்களுக்கு ஒரு நாள் என்பது நம் ஒரு வருடமாம், 6 மாதம் பகல், 6 மாதம் இரவு!! துருவங்களில் இந்த சூழல்தான் நிகழ்கிறது!!!)

கண்கள், காணும் காட்சியை சமிக்ஞைகளாக மாற்றி நரம்புகள் முலம் மூலைக்கு அனுப்புகிறது. ஒன்று செய்யலாம், அந்த சமிக்ஞைகளை நாமே உருவாக்கி நேரடியாக மூலைக்கு அனுப்பினால் கண் பார்காமலே ஒரு காட்சியை மூளை காணும் அல்லவா!!! இது ஏதோ என் கற்பனை என்று நினைக்காதீர்கள். Virtual Reality ஐ பற்றி படித்தவர்களுக்கு இது புரியலாம். இதை Sony நிறுவனம் முயற்சி செய்துகொண்டிருகிறது!!! கண்கள் மட்டும் அல்ல, நம் ஐந்து புலன்களையும் Ultrasonic ஓலி அலைகளின் மூலம் இயக்கும் ஆராய்ச்சி செய்துகொண்டிருகிறார்கள். அது வெற்றி பெற்றால், முப்பரிமாணத்தில் நமக்குள்ளேயே திரைப்படங்கள் ஓடலாம், அந்த திரைபடத்தில் நாமே கூட கதாநாயகனாக வில்லன்களிடம் சண்டை போடலாம், தமான்னாவின் கூந்தலை வாசம் பிடிக்கலாம், காதல் செய்ய சுவிசர்லாந்து போகலாம்!!!

இவைகளை இன்றைய விஞ்ஞானிகள் இபோதுதான் ஆராய ஆரம்பிதிருகிரார்கள், ஆனால் நம்மவர்கள் முன்னமே இதை சாதித்து இருகிறார்கள்!!! அது......