கிறுக்கல்கள்...

ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் இல்லை என் மகளுக்கு. பத்து மாத தளிர். இன்று ஞாயிறு, இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்ற நினைப்பு அவளின் விழிப்பால் தடைபட்டது. சமீப காலமாக நித்ராதேவி என் மீது அதிகம் காதலுடன் அலைவதாகப்படுகிறது. இருந்தும் இன்னும் அவளுடன் மட்டுமே குடும்பம் நடத்த எனக்கு உடன்பாடில்லை. எப்போதும் போல் என மகள் ஆறு மணிக்கே எழுப்பிவிட்டாள். என்னை தட்டி தட்டி, 'ப்பா ப்பா ப்பா ப்பா......' என்று ராகம் பாடினாள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் ' ...' மற்றும் ' ...' என்ற ஜண்டைவரிசைதான்...

முன்பெல்லாம் நிறைய படித்துகொண்டிருந்தேன். எப்போதும் ஒரு புத்தகம் கையில் இருக்கும். பேருந்து பயணத்தில், யாருக்கேனும் காத்திருக்கும் நேரங்களில், கம்பெனியில் சும்மா இருக்கையில், ஊரே மெட்டி ஒலி பார்துகொண்டிருகையில், கழிவறையில்கூட வாசிப்பு தொடர்ந்துகொண்டிருக்கும். ஒரு புத்தகம் முடிந்தால் உடனே அடுத்து. இன்னது என்று இல்லை. 'திருமந்திரம்' படித்தவுடன் இந்திரா சௌந்தரராஜனின் 'கிருஷ்ணா தாசி', அது முடிந்ததும் அண்ணா (இது வேறு அண்ணா!) எழுதிய 'பகவத்கீதை உரை', பின் சாருநிவேதிதாவின் 'ஜீரோ டிகிரி'ஓஷோ வின் 'கிருஷ்ணா', 'ஒரு கோப்பை தேநீர்', சுஜாதாவின் 'நில்லுங்கள் ராஜாவே', இன்னும் பாகவதம், தம்மபதம், இன்னும் இன்னும்............

அபோதெல்லாம் நிறைய நேரம் இருந்தது. இப்போது எங்கே போனது நேரம்!!!

ஒரு நிறுவனத்தில் பனி செய்துகொண்டிருந்தேன். Maintenance. ஏதேனும் சிக்கலான பழுதிருந்தல் மட்டும் அழைப்பு வரும். மற்றபடி அன்றாட பணிகள் எனக்கு கீழ் உள்ள ஊழியர்களால் செய்யப்பட்டுவிடும். படிப்தற்கு நிறைய நேரம் இருக்கும். மாலை வீடு வந்துவிட்டால் நான் வேறு நிறுவனம் வேறு!!!

இன்று... சுய தொழில்... அலுவலகத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனம் அதையே யோசித்துகொண்டிருகிறது. அடுத்து என்ன... அந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு... இவர்களுக்கு என்ன பதில்... என்று எபோதும் மனம் சலனமாகவே இருக்கிறது!!! ஒரு ஆனந்தவிகடன் படிப்பதற்கே ஒரு வாரம் தேவைப்படுகிறது!!

இதில் வலைபூவில் எழுதுவது பெரும்பிராயத்தமாகிறது!! நிறைய பகிர்ந்துகொள்ள ஆவல், அதுவும் ஆன்மிகம். அது ஒரு கடல். ஆனால், அதன் கரையை தழுவும் அலையில் கால் நினைத்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே இங்கு பலர்க்கு ஓங்கி நிற்கின்றது.

இன்னும் கூட ஆழமாக போகலாம் என்றால், உடன் வர யாரும் தயார் இல்லை!! விருப்பம் இல்லையா, துணிவில்லையா என்று தெரியவில்லை. நித்யனன்தவை படித்தார்கள், ஆனால் மாயையை பற்றி படிக்க கூட ஆள் இருக்கவில்லை. எங்கு தவறு என்று புரியவில்லை.

இந்த அவசர யுகத்தில் எப்போதேனும் ஒரு பக்கம் மட்டும் எழுதும் என் தவறுதான் காரணமோ!?!?!?

இனி தினசரி படிப்தற்கு ஒரு மணிநேரமாவது ஒதுக்குவது, எழுதுவதற்கு அரைமணியாவது ஒதுக்குவது என்று (நாளை முதல் சூரிய நமஸ்காரம் செய்வது, காலை பிரம்ம முகூர்ததில் எழுவது, கால் மணி நேரமாவது பிராணாயாமம் செய்வது என்று தினமும் சபதம் எடுப்பது போல் அல்லாமல்!) முடிவு செய்திருக்கிறேன்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கும் கூட்டம், 'செம்மொழி மாநாடு' சூன் 23 - 27 என்று எல்லா இடத்திலும் விளம்பரம் செய்தபோது, அது என்ன சூன்!! ஜுன் என்றால் என்ன குறைந்துவிடும்!! அதை செம்மையாக ஆனி 9 - 13 என்றால் இன்னும் அழகாக இருக்குமே!!! என்றெல்லாம் என்னுள் தோன்றியதை இரண்டு வரிகளில் எழுத இந்த டைரியில் ஒரு இடம் தேவைப்பட்டதால் சின்னதாக ஒரு அலமாரியை திறந்திருக்கிறேன். இனி அதில் தினசரி குப்பைகளை திணிக்கலாம் என்றிருக்கிறேன்.

0 Response to "கிறுக்கல்கள்..."

Post a Comment