சாமி'யார்'.....?!?!?

இன்னமும் நித்யானந்தம்-ரஞ்சிதாவின் மாஸ்டர் CD கிடைக்குமா என்று ஒரு கூட்டம் ஒரு பக்கம் அலைந்துகொண்டு இருக்கிறது. என் நண்பன் ஒருவன் 250 ருபாய், CD வந்திருச்சு என்கிறான். இன்னொருபக்கம், 'முக்தி தரிசனம்' என்று கல்கி கூவி அழைக்கிறார். சத்தம் போட்டால் சாமி ஓடிவிடும் என்னும் ஈசான்ய ஆஸ்ரமம். பெண்களின் ஓட்டு வங்கியை கையகபடுத்தி இருக்கும் பங்காரு. எலுமிச்சை முதல் எட்டு-வட சங்கிலிவரை காற்றிலேயே வரவழைக்கும் புட்டபர்த்தி. இவர்கள் போக உள்ளூரிலேயே அங்கங்கு தென்படும் சுருட்டு சாமியார், அழுக்கு சாமியார், கோமண சாமியார், மற்றும் பலர். இதுவும் அல்லது தேவையான போது மட்டும் வந்து இறங்கும் மாரியம்மன், முருகன், காளி, ஐயனார் சாமி, முனீஸ்வரன், கருபண்ண சாமி - என்னிடம் ஒருவர் தன் மேல் கருபண்ண சாமி வரும் என்றார், நானும் 'வர சொல்லுங்களேன்' என்றேன். அதற்கு அவர் ' எல்லா சமயமும் வரமாட்டார், ஒரு கோட்டர் பாட்டில் உள்ள விட்டாதான் வருவார்' என்றார்!!!!

இவர்களுக்கு மத்தியில் வாழும், தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று நம்பும் சாமான்யர்களுக்கு 'சாமி'யார் என்பதை பற்றி சொல்லியாகவேண்டும்.

மனக்கட்டுப்பாடு, தியானம், சுவாச பயிற்சி இத்யாதிகள் முதல் மோச்சம் வரை(!) கட்டணம் வசூலித்து கற்றுத்தரும் முறை சமீப காலங்களில்தான் பார்க்க முடிகிறது!! 25 வருடங்களுக்கு முன்புகூட இப்படி இல்லை!! ஆன்மிகத்தை பற்றி என்ன நினைத்துகொண்டு இருகிறார்கள் இந்த பித்தலாட்டகாரர்கள்!!! துறவு என்ற வார்த்தையின் அர்த்தத்தையே துறந்துவிட்ட துறவிகள் அல்லவோ இவர்கள்!!!! இன்றைய தலைமுறைகளால், இவர்கள் போலிகள் என்று அறுதியிட்டு பார்க்க முடியாமல்போன காரணம் என்ன?!

நல்ல வழிகாட்டி இல்லை!! அன்று கிருஷ்ணன் மாடு மேய்த்தான், நபிகள் ஆடு மேய்த்தார், கிறிஸ்து ஆடு மேய்த்தார், அனால் இன்று மேய்பார் இல்லாது ஆடுகளும் மாடுகளும் ஒவ்வொரு பக்கம் திரிகின்றது!! அன்று விவேகானந்தர் கேட்ட போதே 100 இளைஞர்களை கொடுத்திருந்தால் இன்று ஒரு விவேகானந்தரை தேடவேண்டிய அவசியம் இருந்திருக்காது!!! நடந்ததை பற்றி பேசி பயனில்லை, இனி ஆவதை பார்ப்போம்.

இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம் போன்ற படிப்புகள் சொல்லிதர ஆசிரியர்கள் இருகிறார்கள், அந்த ஆசிரியர்கள் அந்த பாடத்தில் தேர்ந்தவர்கள்தான, அவர்கள் சொல்லித்தருவது சரிதான என்று சரி பார்க்கவும் வழிகள் இருக்கின்றன. ஆனால், ஆன்மிகம் என்பது முற்றிலும் வேறானது, ஆயிரம் புத்தகங்கள் படிப்பதாலும், பூஜைகளாலும், யாகங்களாலும், பக்தியாலும் எல்லாம் மட்டும் அந்த பரபிரம்மம் என்னும் சமுத்திரத்தின் ஒரு துளியைகூட சுவைக்க தகுதியை தருபவை அல்ல. இவைகளை தாண்டிய அர்ப்பணிப்புதான் நம்மை அந்த பிரம்மதிடம் எடுத்துசெல்கிறது. அதுவே சரணாகதி.

மனம், புத்தி, காயம் இவை மூன்றும் இணைந்து சிரத்தையுடன் செய்யும் முயற்சியால் மட்டும் அந்த ஜோதியை நெருங்க முடியும். அதை நெருங்கியவர்களுக்கு இந்த லௌகிக உலகின் அசைவுகள் அசைக்காது. அப்படிபட்டவர்களின் அனுபவம்தான் அந்த பரமாத்மாவிடம் செல்லும் பாதையை நமக்கு அடையாளம் காட்டும். ஆனால் அத்தனை சீக்கிரத்தில் அவர்களின் அனுபவங்களை நாம் அறிந்துகொள்ள முடியாது. காரணம், அவர்கள் பற்று அற்றவர்கள். அவர்களுக்கு, மண்ணாங்கட்டிகும் தங்கக்கட்டிகும் வித்தியாசம் இல்லை. உங்களுக்கு எதையும் சொல்லிதரவேண்டும் என்ற அவசியமும் அவர்களுக்கு இல்லை. அப்படிபட்டவர்களை தங்கள் குருவாக அடைய அந்த காலங்களில் அவர்களுக்கு பின்னாலேயே அலைந்து, பல சேவைகள் செய்து, அவர்களின் அன்பிற்கு பாத்திரமாகி முக்தி அடையும் மார்க்கத்தை போதனையாக பெற்றார்கள். பிரம்ம ரகசியம் உணர்ந்தார்கள். இப்படிப்பட்ட ஆசான்களின் கால் தூசிக்கு ஒப்பாவார்களா, இன்று காவி போர்வைக்குள் ஒளிந்துகொண்டு தன்னையே கடவுள் என்று சொல்லிகொள்பவர்கள்!!!

இங்கு நான் நித்யானந்தாவை மட்டும் மனதில் வைத்துகொண்டு பேசவில்லை, புட்டபர்த்தி சாய்பாபா, கல்கி, பங்காரு அடிகளார் போன்றவர்களையும் சேர்த்தே சொல்கிறேன். ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டு இருக்கும் பிரேமானந்தாகூட இன்னும் துறவறத்தை(!!) துறக்கவில்லை. இன்றும் அவருக்கு பக்தர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்த பக்தர்கள் சொல்லும் காரணம் 'குருவின் அருளால்தான் இன்று என் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது...' இன்னும் அவரால் இந்த அதிசயம் நிகழ்ந்தது, அந்த ஆச்சர்யம், பல பல கதைகள் அவர்களிடம் இருக்கும். அவைகள் அத்தனையும் பொய் என்று நான் சொல்லமாட்டேன். அப்படி நிகழ்வதற்கும் சாத்தியங்கள் உண்டு. ஆனால் அதற்க்கு அந்த குரு எனும் சாதாரண மனிதன் காரணம் அல்ல என்பதை உணருங்கள் மக்களே. இன்னமும் முன் செல்லும் ஆட்டின் வாலை முகர்ந்து பின்னாலேயே செல்லும் செம்மரிஆடாக இருக்காதீர்கள்.

மெய் பொருள் காண்பது அறிவு.

ஒரு மாங்கொட்டையை புதைத்து வைக்கிறேன். சில வருடங்களில் அது பெரிய மரமாக, வேர், இலை, கிளை, பூக்கள், காய்கள், கனிகள் என்று வளர்ந்து நிற்கிறது. இப்போது கேட்கிறேன், நான் புதைத்துவைத்த அந்த விதை இந்த மரத்தில் எங்கே உள்ளது? பதில் சொல்ல முடியுமா? நீர், சூரிய ஒளி, காற்று, மண் என்று இத்யாதிகள் கூட அந்த விதை, மரமாக காரணமாக இருக்கலாம், ஆனால் இந்த மரத்தின் ஒவ்வொரு துகளிலும் அந்த விதையின் சாரம் இருப்பதை மறுக்கமுடியுமா?

அப்படிதான் கடவுளும்...

'தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான்' என்று பிரகலாதன் கூரியதை ஏதோ விஜய் பட பஞ்ச் டயலாக் என்று உதாசீனப்படுத்தவேண்டாம்.

பிரபஞ்சம் என்பதை பற்றி முன்பு குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவு கூறுகின்றேன். அதன்படி, உயிர் உள்ள உயிர் அற்ற என அனைத்தினுள்ளும் அந்த பிரமத்தின் சாரம் இருக்கிறது. உம்முள், எம்முள் என எங்கும் பிரம்மம் நிறைந்துள்ளது. எதிரில் இருக்கும் மனிதனை அந்த பிரம்ம ஸ்வரூபமாக பாவித்து மனமுருகி வேண்டினால் நிச்சயம் நன்மைபயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படிதான் பெரும்பாலான சாமியார்கள் பிழைப்பு நடத்துகிறார்கள். உங்கள் வீட்டு நாய்குட்டி கூட அந்த பிரம்மம்தான், அதனிடம் உங்கள் குறையை சொல்லிபாருங்கள், கண்டிப்பாக பாதிக்குமேல் பலிக்கும்!!! அதற்காக அந்த நாய்குட்டி தன்னை கடவுள் என்று சொல்லிகொள்ளாது, ஆனால் மனிதன் சொல்லிகொள்வான், அவனுக்குத்தான் ஆறு அறிவு!!!

சித்து வேலைகள்!! சில சாதகங்கள் செய்தால் சித்துகள் கைகூடும். யோக பாதையில் கிடைக்கும் ஒரு சின்ன கைதடி அது. அதை பயணம் செய்ய பயன்படுத்தவேண்டும் அன்றி, சிலம்பாட்டம் ஆடி கூட்டம் சேர்க்க பயன்படுத்த கூடாது. செய்தால், பயணம் அத்துடன் நின்றுவிடும்!! இவைகள் அற்ப விசயங்கள் என்பதை சொல்வதற்கு இங்கு ஆள் இல்லாததால்தான் இவர்கள் இத்தனை ஆட்டம் போடுகிறார்கள்!! தயவு செய்து புரிந்துகொளுகள் மக்களே.

கந்துக மதக்கரியை
வசமாய்
நடத்தலாம்
கரடிவெம்
புலிவாயையும்
கட்டலாம்
ஒரு சிங்கம்
முதுகின்மேற்
கொள்ளலாம்
கட்செவி
எடுத்தாட்டலாம்
வெந்தணலி
லிரசம்வைத்
தைந்துலோ
கத்தையும்
வேதித்து
விற்றுண்ணலாம்
வேறெருவர்
காணாமல்
உலகத்
துலாவலாம்
விண்ணவரை
ஏவல்கொளலாம்
சத்ததமும்
இளமையோ
டிருக்கலாம்
மற்றொரு
சரீரத்தி
னும்புகுதலாம்
சலமேல்
நடக்கலாம்
கனல்மே
லிருக்கலாம்
தன்னிகரில்
சித்திபெறலாம்
சிந்தையை
அடக்கியே
சும்மா
இருக்கின்ற
திறம்
அரிது.

-
தாயுமானார்.

......அப்படிப்பட்டவர்களை காண்பது அதனினும் அரிது!!

2 Response to "சாமி'யார்'.....?!?!?"

  1. RAMYA says:
    June 19, 2010 at 9:21 AM

    //
    'தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான்' என்று பிரகலாதன் கூரியதை ஏதோ விஜய் பட பஞ்ச் டயலாக் என்று உதாசீனப்படுத்தவேண்டாம்.
    //

    சரியா சொல்லி இருக்கீங்க! இறைவனடி அடைய இடைத்தரகர்கள் வேண்டாமே!


    //
    அதை பயணம் செய்ய பயன்படுத்தவேண்டும் அன்றி, சிலம்பாட்டம் ஆடி கூட்டம் சேர்க்க பயன்படுத்த கூடாது.
    //

    ஆமாம் பயன் படுத்தினால் நஷ்டம் நமக்குதான்!

  2. Shakthiprabha (Prabha Sridhar) says:
    December 24, 2011 at 12:11 AM

    உங்கள் எழுத்தின் ஆழம் எனக்கு பிடித்தமானது. உங்களின்
    இப்பதிவை வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)

    கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_24.html

Post a Comment