மாயை - பகுதி 3

உண்மையான உண்மை, பொதுவான உண்மை, பொய்யான உண்மை என்று மூன்று விதமான உண்மைகள் இருப்பதாக சொல்லி அதற்க்கு விளக்கமும் தருவர் டாக்டர் அறிவொளி, கேடிருக்கிறீர்களா!?

உண்மையான உண்மைக்கு விளக்கம் தேவை இல்லை. சத்தியமானவை எல்லாம் உண்மையான உண்மைகளே.

பூமி உருண்டையாக இருக்கிறது என்பது நமக்கு எப்படி தெரியும்? நம் பார்வைக்கு அவை தட்டையாக தானே இருக்கிறது!! விண்வெளிக்கு சென்று பார்த்து சொல்கிறார்கள், புகைப்படங்களை காட்டுகிறார்கள், விளக்கங்கள் தருகிறார்கள். அதனால் நம் பார்வைக்கு தட்டையாக தெரிந்தாலும் இந்த பூமி உருண்டை என்பதை நம்புகிறோம். இது பொதுவான உண்மை!!

நம் பூமி 71% நீராலும் மீதி 29% சதவீதம் மட்டுமே நிலத்தால் ஆனது என்கிறார்கள்- விஞ்ஞானிகள் உட்பட. சரி, அந்த 71% நீரின் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து உள்ளே இறங்குவோம், உள்ளே உள்ளே உள்ளே என்று சென்றுகொண்டே இருந்தால் கடைசியில் தட்டுபடுவது நிலம்!!! இந்த கூற்றுபடி 29% நிலம் என்பது பொய் என்று ஆகிறது அல்லவா!!? வேண்டுமானால், நீர் நிறைந்திருப்பது பள்ளமான நிலத்தில் என்று சொல்லிகொள்ளலாம். மற்றபடி இந்த பூமி 100% நிலத்தால்தானே ஆனது!! இதைதான் பொய்யான உண்மை என்று திரு.அறிவொளி சொல்லுவார்.

அவர் சொல்லுவது இருக்கட்டும், நீ என்ன சொல்ல வருகிறாய் என்று கேட்பது காதில் விழுகிறது. சொல்கிறேன்.

நம்மை ஆள்வது நம் மனம் என்று நினைத்துகொண்டிருந்தால் அது பொதுவான உண்மை. நம் இந்த்ரியங்கள் சொல்வது எல்லாம் நிஜம் என்று நினைப்பது பொய்யான உண்மை. மனம் என்பது முதலமைச்சர் என்று வைத்துகொள்வோம். கண், காது, மூக்கு, நா, ஸ்பரிசம் என்ற பஞ்ச இந்த்ரியங்கள் - அதிகாரிகள். முதல்வர், அதிகாரிகள் தரும் தகவல்களை அப்படியே ஏற்று ஆட்சி செய்தால், மறைமுகமாக அந்த ஆட்சி அதிகாரிகள் கையில் சென்றுவிடும்!! மிக பெரும்பாலாக நாம் அனைவரும் இந்த்ரியாங்களின் கட்டுபாட்டிருக்கு உட்பட்ட முட்டாள் முதலமைச்சர்களே. நம்மை அறியாமலே நாம் இந்த்ரியாங்களின் இச்சைக்காக வாழ்பவர்களாகிறோம்.

இது நம் உடல் தானே!! எங்கே, பசி அற்று சில காலம் இருக்க சொல்லுகள்!! சுவாசம் இன்றி சில மணிநேரம் இருக்க சொல்லுகள்!! ருசியான உணவை கண்டால் நம்மை அறியாமலே நா ஊரும்!! வெறும் வார்த்தைகள் கூட ரத்தத்தை கொதிக்க செய்து, கொலை கூட செய்ய தூண்டும். யோசித்து பாருகள், ஒரு நாளில் எத்தனை விசயங்கள் நம்மை மீறி நடகின்றது என்று. உங்கள் பேச்சை உங்கள் உடலை கேட்காத பொது, மனைவி எங்கே கேட்க்க போகிறாள்!!

இந்த இந்த்ரியங்களை கட்டுபடுத்தி, நம் மனதையும் உடலையும் ஆட்சி செய்ய எத்தனயோ யோகா நெறிகளை கற்பித்தார்கள், நம் முன்னோர்கள். பதஞ்சலி முதல் விவேகனந்தர்வரை இதை பற்றிய தங்கள் அனுபவகளை எழுதிவைத்தார்கள். நாம் இதை படிக்கவாவது செய்கிறோமா?!

இப்போது மாயையை கொஞ்சம் நெருங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்னும் கொஞ்சம் அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.

மாயை - பகுதி 2

பிரபஞ்சம் - பெயர் காரணம் தெரியுமா?
பிரம்மம் என்பது பஞ்சமாக பிரிந்திருப்பது பிர-பஞ்சம்...
பஞ்ச பூதங்கள்; நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். பிரபஞ்சத்தின் அனைத்தும் ஐந்து பூதங்களின் சேர்க்கையே, மனிதன் உட்பட.
நாம் ஒரு பஞ்ச பூத சேர்க்கைதான்... நிலம்- தசை, எலும்பு, போன்றவை. நீர் - ரத்தம், உமிழ் நீர், போன்றவை. நெருப்பு - உடலின் உஸ்ணம். காற்று - பரணன் முதலான வாயுட்கள். ஆகாயம் - மனம்!
இந்த ஆகாயம் மிக விசித்திரமானது. ஆகாயம் - space ; வெளி... நமக்கும் பக்கத்தில் இருப்பவர்க்கும் இடையில் இருபதும் வெளி தான், அண்ணாந்து பார்த்தல் எல்லை அற்று விரிந்து கிடப்பதும் வெளி தான்... என்றேனும் இரவில் தனிமையில் மல்லார்த்து படுத்து வானவெளியை பார்த்து வியந்ததுண்டா? இல்லையென்றால் இன்று இரவே முயற்சிசெயுங்கள்... எத்தனை நட்சத்திரங்கள்... நட்சத்திர மண்டலங்கள்... இவைகளின் மத்தியில் மாபெரும் நட்சத்திகளையே விழுங்கும் கருந்துளைகள்... பார்வைக்கு நட்சத்திரங்கள் அருகருகே இருப்பதாக தெரிந்தாலும், அவைகளுக்கு இடையே இருக்கும் இடைவெளி பல ஒளி ஆண்டுகள்.. ஒரு ஒளி ஆண்டு எவ்வளவு தெரியுமா? ஒளி துகள், ஒரு வினாடிக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்யும், அந்த வேகத்தில் ஒரு வருடம் பயணம் செய்தால் எத்தனை தூரமோ அது ஒரு ஒளி ஆண்டு தூரம்!! இப்படி 4 ஒளி ஆண்டு துரத்தில் தான் நம் சூரிய குடும்பத்தின் மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் இருக்கிறது!!! இவ்வளவு விஸ்தாரமான இந்த விண்ணிற்கு எல்லை இருக்கிறதா? அப்படி ஒரு எல்லை இருப்பின் அந்த எல்லைக்கு பின் என்ன இருக்கிறது? அப்படி ஒரு எல்லை இல்லை என்றால் அதை எப்படி என்று கற்பனையில் நினைத்து பாருங்கள்!!!
செயற்கை கோல், அதி நவீன தொலைநோக்கி என்றெல்லாம் பல சாதனங்களை வைத்து விஞ்ஞானம் தேடிகொண்டிருகிறது... பிரபஞ்சம் தோன்றிய கணத்திலிருந்து இப்போது வரை கண்டுபிடிதுவைதிருகிறார்கள்... இன்னும் பிரபஞ்சம் தோன்றிய கணத்தையும், அதற்க்கு முன் என்ன என்பதற்கும் இன்னும் பதில் இல்லை!!
இந்த ஆகாசத்தின் ரகசியம் இன்னும் மனிதனால் புரிந்துகொள்ள முடியவில்லை... அதன் எல்லைகளை அறுதியிட முடியவில்லை... மனிதனின் மூளையைபோல!! இன்னும் நம் மூளையை நொண்டிக்கொண்டே இருகிறார்கள்... இங்கு தொட்டால் மூளையின் இந்த பகுதி சிலிர்கிறது.. இதை பார்த்தல் இந்த பகுதி விரிகிறது என்றெல்லாம் தினமும் கண்டுபிடிக்கிறார்கள்... மனம் என்பது எங்கே இருக்கிறது என்று தேடுகிறார்கள்... சுலபமாக சொல்லுகிறோம், 'மனமார வாழ்த்துகிறேன்' என்று, ஆனால் அந்த மனம் நம் உடலில் எங்கு இருக்கிறது என்று யோசித்து பார்த்துண்டா?
மனம் நம்ம மூளைதான்... அதை நம்மால் உணரமுடியததர்ற்கு காரணம், நம் மூளைக்கு உணர்ச்சி இல்லை!! உணர்வற்ற ஒன்னறை அறுதியிட்டு இங்கு இருக்கிறது என்று சொல்ல இயலாது... கை கால் உணர்ச்சி அற்றவர்களை கேட்டு பாருங்கள் புரியும்... மூளைதான் சகலமும்... சகர்ஸ்ரதலம்... ஆயரம் இதழ் கொண்ட தாமரை!! குண்டலனி பற்றி என்றேனும் சொல்லும்போது இதை பற்றி பேசலாம்....
ஆகாசதிற்கு வருவோம். மாயையை பற்றி பெசிகொண்டிருகும்போது எதற்கு ஆகாசம் என்று நினைக்கலாம். இந்த விளக்கம் பின்னர் தேவைபடலாம் என்பதற்காக சொல்லிகொண்டிருக்கிறேன், தேவை இல்லாமலும் போகலாம்!!
மனமேதான் ஆகாசம்... ஆகாசம்தான் மனம்...
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்... பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்....
அகம் பிரம்மாஸ்மி...

மாயை - பகுதி 1

இதை எழுதுவதற்கு சில கணங்களுக்கு முன் வெளியே உலாவிகொண்டிருந்தேன்.
மாலை பொழுதின் கடைசி நிமிடங்கள்....
வளர்பிறை நிலவின் வெளிச்சத்தை மெல்லிய மேகதிடல்கள் தடுக்க போராடி தொற்றுகொண்டிருந்தது...
'மங்கியதோர் நிலவினிலே...' என்ற பாரதியின் வரிகள் நினைவை வருடியது...
மிக மெல்லிய மழை சாரலில், காற்றில் குளுமை கூடியிருந்தது...
வீட்டின் பின்புறம் ஜாதி முல்லை கொடி ஒன்று உண்டு. கொடி முழுக்க பூக்கள் சின்னதாய் சிரிக்க துவங்கியிருந்தது. முல்லை கொடியின் கரும்பச்சை இலைகள், மெல்லிய இருளில் இன்னும் இருட்டாய் தெரிய, அதன் மீது சிறிய முத்துக்களாய் இந்த பூக்களை பார்ப்பதற்கு, வானத்து நட்சத்திரங்கள் தரையில் சிதறிக்கிடப்பதுபோல் இருந்தது...
பூக்க துவங்கிய முல்லையின் வாசமும் வீச துவங்கியது அந்த நிமிடத்தை இன்னும் பரவசப்படுதியது...
எத்தனை அழகான மாலைபொழுது...
இந்த காட்சி, வாசம், நிலவொளி, தென்றல், எல்லாம் மாயை என்றால் ஒப்புகொள்ளமுடியுமா!!!
இது மட்டுமல்ல, இதோ இந்த வார்த்தைகள், அவற்றை உங்களுக்கு காட்டும் இந்த கணினி, அமர்ந்திருக்கும் நாற்காலி, இதை எழுதும் நான், படித்துகொண்டிருக்கும் நீங்கள், யாவும் மாயை என்றால் நம்புவீர்கள!!!
எப்படி நம்புவது!!
இதோ என் காதல் மனைவி, ஆசை குழந்தைகள், அவர்களின் மழலை, இவை எல்லாம் என் முன் விரிந்திருக்கும் சுவர்க்கம்... இவை எப்படி மாயை என்பேன், என்று ஆனானப்பட்ட பாரதியே "நிற்பதுவே நடபதுவே...." என்று பாடினார்....
அந்த வரிகள் நினைவில் இருக்கிறதா?! ".....வானகமே இளவெயிலே மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின்நீரோ? வெறும் காட்சிப்பிழைதானோ? போனதெல்லாம் கனவினைபோல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?...."
இப்படி பாரதியே நம்ப மறுத்த இந்த மாயை, ஒரு நிதர்சன உண்மையே!!!

தேள்...

மாயை பற்றி எழுதலாம் என்ற சிந்தனையுடன் உலாவிகொண்டிருந்தபோது, வீட்டின் முன், தெருவில் நிதானமாக ஒரு தேள் சாவதானமாக சென்றுகொண்டிருந்தது கண்டேன். சர்ப்பம் பற்றி எழுதியதிலிருந்தே அடிக்கடி கனவில் வந்துகொண்டிருந்த தேள், இன்று நேரிலேயே வந்துவிட்டது!! தன்னை பற்றி எழுதவில்லை என்ற ஆதங்கம் போல...!!!!

வெளிச்சம் குறைந்திருந்த மாலை பொழுது. தெரு விளக்கின் வெளிச்சத்தில் நிதானமாக நடந்துகொண்டிருந்தது. நல்ல கருமை. முன்பக்கம் நண்டிற்கு இருப்பதுபோல் நல்ல அகன்ற இடிக்கி போன்ற இரண்டு கொடுக்குகள். தேளில் இது நட்டுவாகிலி வகை. எப்படியும் ஏழு அங்குலம் நீளம் இருக்கும். காடுகளில் வாழும் இந்த வகை, ஒரு அடி நீளம் வரை கூட வளருமாம்!!!

பார்ப்பதற்கு கர்னகொடூரமாய் இருந்தாலும் இது ஒரு அசமந்த பிராணி! சாதாரணமாய் திரியும் செந்தேள், மரதேள், போன்றவைபோல் இது சட்டேன்று கொட்டிவிடாது. தன் முன்பக்க கொடுக்குகளால் வசமாக பிடிப்பு கிடைத்தபின்பு இடம் பார்த்து தன் வால்பக்க கொடுக்கால் ஓங்கி கொட்டும். இதற்குள் அதனை உதறிக்கொண்டு அப்பால் போய்விடலாம்!

இருப்பினும் இது ஆள் நடமாட்டம் உள்ள தெரு, மொத்த தெருவிற்கும் ஒரே விளக்குதான். வெளிச்சம் இல்லாத பகுதியில் இதை யாரேனும் தெரியாமல் மிதித்துவிட்டால்...!!! விபரீத சந்தர்பங்களின் சாத்தியங்களை தவிர்க்க அதனை தொந்தரவு செய்வது தவிர வேறு வழி தோன்றவில்லை.

ஒரு இடுக்கியின் உதவியால் அதன் வாலைப்பற்றி ஆள் நடமாட்டம் அற்ற புதர்வரை இழுத்து சென்றேன். அதன் வால் பகுதி, பெரிய பாசிமணிகளை கோர்த்து போல் மொளுமொளுபாக இருப்பதால் தூக்கிச்சென்றால், நழுவி விழும் வாய்புகள் அதிகமாதலால் தரையோடு இழுத்து சென்றேன். (இது போன்ற தேள்களை கொன்று புதைத்து சில நாட்கள் கழித்து புதைத்த இடத்தை தோண்டி பார்த்தல் அதன் மற்றபகுதிகள் மண் தின்று இந்த வால் பகுதிமட்டும் பாசிகளாக கிடைக்கும், அதனை நூலில் கோர்த்து குழந்தைகளுக்கு அணிவிப்பார்கள், திருஷ்டிக்காக!!!) அதன் கொடுக்கை பற்றியவுடன், அதிலிருந்து விடுபட அது எடுத்த முயற்சிகள் அலாதி, உள்ளகை நீளமாய் உள்ள அதன் பலம் ஆச்சரியபடவைத்தது!!!

பாம்பு கடிபோல் தேள் கடிக்கு இதுதான் மருந்து என சொல்ல இயலாது. காரணம், தேளின் விஷம் நம் ஒவ்வொருவரின் உடல்வாகை பொருத்தும் கடுமையாகவோ சாதாரனமாகவோ செயல்படும். தேள் கடிபட்டவர்க்கு பித்த உடம்பா, வாத உடம்பா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து நேரத்தை வீணடிக்காமல் மருத்துவரிடம் செல்லவது சாலச்சிறந்தது.

உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தை சொல்லுகிறேன்.

தேளின் வால் பகுதியில், கொட்டுகை தவிர்த்து மற்ற பாசி போன்ற பகுதிகளை நசுக்கினால் வெள்ளை நிறத்தில் பசை போல் இருக்கும். அதுதான், அந்தந்த தேள் கடிக்கு மருந்து!!! கடித்த தேளை பிடித்து கொன்று இந்த பசை போன்ற வஸ்துவை கடிவாயில் பூசினால் வலி குறையும், விஷம் இறங்கும்.

இருப்பினும், ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனையுடன் எதையும் செய்யவும்...

தேளை பற்றி ஒரு கதையை சொல்லி முடிக்கிறேன்...

தேள் ஒன்று கங்கையில் தத்தளித்து சென்றது. ஒரு சந்நியாசி அதை வெளியே எடுத்துவிட முயன்றார். அவரை கொட்டிவிட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. பல முறை இப்படி நிகழ்த்து. இதை கண்ட ஒருவன், "அது கொட்டுவது வலிக்கவில்லையா!! அறிவில்லாதது, அதை காப்பாற்ற நினைக்கும் உன்னை கொட்டுகிறதே, அதை ஏன் எடுக்கவேண்டும்?" என்றான். அதற்க்கு அந்த சந்நியாசி, "உயிர் போகும் தருவாயிலும் அறிவில்லாத அதுவே தன் சுபாவத்தை விடவில்லை, அறிவுள்ள மனிதனாகிய நான் மட்டும் என் சுபாவமாகிய ஜீவகாருண்யத்தை எதற்கு விடவேண்டும்?!" என்றார்....

கர்ம யோகம்...

புரிந்துகொள்ள மிக சுலபமானது கர்மயோகம், அதேவேலையில் மிக மிக சிரத்தையானது கர்மயோகியாக வாழ்வது.

இக்காலகட்டத்திற்கு கர்மயோகம் சிறந்தது என்பேன்.

பாற்கடல் விஷ்ணுவும், இடுகாட்டு சிவனும் கர்மயோகத்தின் அடையாளங்களே.

நம் செயல்கள் யாவும் நம்மால் செய்யபடுவதில்லை, நாம் வெறும் கருவிகளே. நம் செயல்கள் எப்படி நம்முடையதில்லையோ அதே போல் அச்செயல்களால் வரும் இன்ப துன்பகள், நன்மை தீமைகள் நம் மனதை தீண்டாதிருக்கசெய்வதே கர்மயோகம்...

இதை தான் கீதையில் 'நானே செய்கிறேன்... நானே எல்லாம்.... ' என்று அர்ஜுனனிடம் அடிக்கடி கிருஷ்ணபரமாத்மா சொல்கிறார்...

கீதா சாரம் என்று எல்லா கடைகளில் (finance company உட்பட) ஒட்டி வைகிறார்கள்...

காவி மட்டும் கட்டிய சாமியார் முதல் வாயில் லிங்கம் எடுக்கும் சாமியார்வரை சொல்கிறார்கள்... (சொல்ல மட்டும் தான் செய்கிறார்கள்...)

A.R.ரகுமான் ஆஸ்கார் மேடையில் 'எல்லா புகழும் இறைவனுகே...' என்கிறார்...

பன்னிரண்டு குழந்தைகளை பெற்ற ஒரு தாத்தா சொன்னார், 'நம்ம கைல என்னபா இருக்கு, எல்லாம் ஆண்டவன் தந்தது....'

இவை அனைத்தையும் நாம் கேட்க மட்டும் செய்கிறோம், அதை சிந்திப்பதே இல்லை...

ஒருமுறை யமுனையின் மறுகரையில் வியாசர் வந்து தங்கியிருந்தார்.

கிருஷ்ணனே போற்றி வணங்கும் அம்மகரிஷியை தரிசிக்க கோபியர்கள் விரும்பினார்கள்.

பெரியவரை காணச்செல்வதால், பழங்களையும் சில பலகாரங்களையும் சமைத்து எடுத்துச்சென்றனர்.

அக்கறை சென்ற கோபியர், வியாசரை தொழுது, ஆசிபெற்று தாங்கள் கொண்டுவந்ததை நைவேதியமாக எடுத்துக்கொள்ள வேண்டினர்.

அவர் உண்ட மிச்சத்தை பிரசாதமாக எடுத்து செல்ல நினைத்திருந்த கோபியர்களுக்கு, ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் சுத்தமாக சாபிட்டுவிட்டார் வியாசர்.

பாவம், மனிதருக்கு மிகுந்த பசி போல என்று நினைத்துக்கொண்டு அவரிடம் விடைபெற்று புறப்பட்டனர். அப்போது யமுனையில் வெள்ளம் சீற்றத்துடன் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்ததை கண்டு, வியாசரிடம் தங்களை மறுகரைக்கு செல்ல உதவுமாறு வேண்டினர்.

அவர்களின் வேண்டுதலை ஏற்று, யமுனையை நோக்கி "நான் இன்று ஒரு துளி நீர் கூட அருந்தாது உபவாசம் இருப்பது உண்மையானால், யமுனையே இவர்களுக்கு வழி விடு..." என்றார்...

யமுனையும் வழிவிட்டது....!!!!

வியப்புடனே நதியை கடந்த கோபியர், கண்ணன்னிடம் சென்று நடந்ததை சொல்லி , எப்படி இது நிகழ்ந்தது என்று வினாவினர்.

கண்ணன், "உண்ட உணவு யாவுமே, கிருஷ்ணா! உனக்கே அர்ப்பணம் என்று உள்ளத்தளவில் அவர் அர்ப்பணித்ததால், அதன் ருசி கூட அவர் நாவை தீண்டாது என்னை வந்தடைந்தது, எனவே அவர் உபவாசம் இருந்தது உண்மையாயிற்று" என்றான்.

இத்தனை ஆத்மார்த்தமாக நம்மால் இருக்க இயலுமானால், நாமும் கர்ம யோகிதான்..

இன்னும் கர்மயோகத்தை போதிக்கும் இதிகாச நிகழ்ச்சிகள் பல உண்டு, அவ்வப்போது சொல்கிறேன்..

சர்ப்பம்....

அதிக மனித உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கும் பிற உயிரிணங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த உயிரிணம், பாம்பு. வருடத்திற்கு சராசரி பத்தாயிரம் பேர் உயிரிழக்கின்றார்கள். முதல் இடம் பிடித்தது எது என்று யோசித்து வையுங்கள், கடைசியில் சொல்கிறேன்.

உலகில் இதுவரை மூவாயிரம் வகையான பாம்புகளை இனம் கண்டிருக்கிறார்கள். அவைகளில் ஐம்பது வகைகள் மட்டுமே உயிரை பறிக்கும் அளவு விஷம் கொண்டவை.


அதிக விஷம் கொண்டவைகளில் ' Inland Taipan ' வகை பாம்பின் விஷம் ஒரே சமயத்தில் நூறு மனித உயிர்களை குடிக்கவல்லது. இதை விட அதிக விஷம் கொண்ட ஒரு கடல் பாம்பு உண்டு, (அதன் விஷம் ஆயிரம் மனித உயிரை பறிப்பதற்கு போதுமானது). ஆனால் அது மனித நடமாட்டம் இல்லாத கடலின் ஆழத்தில் வாழ்கிறது. மீறி கடித்தாலும் அவ்வளவு சீக்கிரம் விஷத்தை பாய்ச்சுவதில்லை. நல்ல வேளை இவைகள் நம் நாட்டில் இல்லை. ஆஸ்திரேலியாவின் வறண்ட வெளிகளில் வாழும் Taipan வகை பாம்புகளை விட்டு நம் நாட்டு பாம்புகளை பார்ப்போம்.


நம் நாட்டு பாம்புகளில் கொடிய விஷமுடையது நாகம் என்று எண்ணிக்கொண்டிருந்தால் , அது தவறு. உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் இரண்டாம் இடம் பிடிப்பது நம்மூர் எண்ணை விரியன் எனும் எட்டடி விரியன் . கருமை நிறம் கொண்ட அதன் உடல் மீது எட்டு வெள்ளை நிற கோடுகள் இருக்கும். எட்டடி விரியன் என்பதால், அது எட்டு அடி நீளம் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். அதிக பட்சம் ஐந்து அடி தான் வளரும். அது கடித்தால், மனிதன் எட்டடி நகர்வதற்க்குள் உயிர் பிரிந்துவிடுமாம். அதனால் தான் அதற்க்கு எட்டடி விரியன் என்று பெயர். இதனிடம் 25% மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது. (Taipan கடிக்கு 15% மட்டும்!!)


அடுத்து ரத்த மண்டலி, அனலி(மலையாளம்) என்றெல்லாம் அழைக்கப்படும் சுரட்டை. இது கடித்தால் அரை மணியில் கண், காது, மூக்கு, பல் இடுக்கு, நகக்கண், வியர்வை துவாரம் வரை எல்லா துவாரங்களிலும் ரத்தம் கசியும், பின் மரணம் தான். நாகன் வகையறாக்கள் கடித்தால் உடல் நீலநிறமாகும்.


பாம்பு விஷங்கள் இரண்டு வகை மட்டுமே உண்டு. நாகம் வகை பாம்புகளின் விஷம் ரத்தத்தை கட்டியாக்கி விடும். விரியன் வகைகளின் விஷம் ரத்தத்தை இன்னும் நீர்த்து ரத்த அளவை அதிகரிக்கும், அது தான் கண், காது, என வியர்வை துவாரம் வரை கசிய செய்கிறது.


அலோபதி மருத்துவத்தில் நாகம் வகை பாம்பு கடிக்கு விரியன் வகை பாம்பின் விஷம் கொடுத்து ரத்தம் கட்டியாகாமல் தடுக்கிறார்கள். விரியன் வகை கடிக்கு நாகத்தின் விஷம் மருந்தாகிறது. இது தான் விஷத்தை விஷத்தால் எடுப்பது. பாம்பு கடிக்கு அதன் விஷமே மருந்தாகிறது. இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கடித்த பாம்பு இன்ன வகை என்று கண்டிப்பாக மருத்துவருக்கு தெரிய வேண்டும், மாற்றி மருந்து கொடுத்தால் எதிர்வினை ஆகிவிடும். இதற்கு நம் கிராமப்புற நாட்டு மருந்து சிக்கல் இல்லாதது, சுலபமானது. இன்னும் கூட சில கிராமங்களில் விஷக்கடி வைத்தியர்கள் இருக்கிறார்கள்.


இவர்களிடம் உள்ள ஒரு கொள்கை (பிடிவாதம்) என்னவென்றால், வீட்டு வாசலில் அல்லது கோவிலில் வைத்து பாம்பு கடித்தால் வைத்தியம் பார்க்கமாட்டார்கள். அந்த இடங்களில் பாம்பு கடிக்காதாம், மீறி கடித்தால் அவை வரம் வாங்கி வந்திருக்குமாம்.பாம்பு கடிக்கு கொஞ்சம் சுலபமான நாட்டு வைத்தியம்.


முருங்கை!!!


பாம்பு கடித்த இடத்திற்கு கொஞ்சம் மேலே கயிற்றால் இறுக்கக்கட்டி கடித்த இடத்தில் தாட்சணியம் இல்லாமல் கீறி ரத்தத்தை வெளியேற விடவேண்டும், திரைப்படங்களில் வருவது போல, விஷத்தை உறிஞ்ச முயற்சிக்காதீர்கள், உங்கள் வாயில் சொத்தை பல், பலகீனமான ஈர்கள் இருப்பின், உங்களுக்கே வினையாகிவிடும். இந்த சமயத்தில் முருங்கை மர பட்டையை கடிபட்டவருக்கு கொடுத்து வாயில் இட்டு மென்று சாரை குடிக்கலாம். பட்டையை வாயிலேயே கடித்து வைத்துக்கொள்ளவேண்டும். முருங்கை கீரையை அரைத்து கடிவாயில் வைத்து கட்டிவிடவேண்டும். கடித்து இருபத்து நான்கு மணி நேரத்திற்கு வெறும் சோறு, உடன் வேகவைத்த முருகை இலை தவிர வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. தூக்கம் அறவே கூடாது. அடுத்த 48 நாட்களுக்கு, கத்திரிக்காய், நார்தங்காய், நல்லெண்னை, கருவாடு, கருப்பட்டி, தட்டபயறு, உருளை கிழங்கு, சேனை கிழங்கு கூடாது, மற்றும் அசைவம் கூடவேகூடாது .

இருப்பினும், ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனையுடன் எதையும் செய்யவும்...

என்னை பொருத்த வரை எந்த பாம்பும் முகம் பார்த்து பழி வாங்குவது திரைப்படங்களில்தான். மனிதனால் பாம்பு இறந்தாலும் பாம்பினால் மனிதன் இறந்தாலும் எனக்கு நினைவிற்கு வருவது கீழே உள்ள கவிதை தான். அதற்கு முன் இந்த கட்டுரையின் துவக்கத்தில் கேட்டிருந்த கேள்விக்கு பதில் தெரிந்ததா? அதற்கு விடை கொசு!!! காலரா கொசு!!! அதனால் வருடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இறக்கிறார்களாம்!!!


பாம்பு...

சீறுவோம் படமெடுப்போம்...

கொல்ல துணிந்ததில்லை

என்றேனும் பயத்தில்

அப்படியும் நிகழ்வதுண்டு....

எங்களை போல்தான்

மனிதர்களும்...

அவர்களுக்கும் அது

தெரியும் தான் - தெரிந்தும்

இருவரும் இதுவரை

பயத்தை வென்றதில்லை.....


stroke-ம் சாமியாரும்...

இருபது நாட்களுக்கு முன் அப்பாவிற்கு stroke... இடது மூளையில் ரத்த கசிவு... லேசான stroke தான்... அன்றிலிருந்து stroke பற்றிய எனக்கு கிடைத்த அனுபவங்கள் அலாதியானது... பார்க்கவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மருத்துவமுறையை சொல்வார்கள்... சிலர் திணிப்பார்கள்... இதில், நேற்று வந்த ஒரு சாமியார் பற்றி சொல்லியேஆகவேண்டும்...
சிவா சண்முக சுந்தர பாபுஜி...

அருள்வாக்கு சொல்பவராம்... யாரையும் அவர் வீடு வரை சென்று பார்ப்பதில்லையாம்... வீடு வரை வந்தது எங்கள் அதிர்ஷ்டமாம், அவரே சொன்னார்!!!!

பாபுஜி வந்த அன்று காலை அப்பாவின் நிலையை சொல்லியாகவேண்டும்...

அலோபதி மருந்தை, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த அடுத்த நாளே நிறுத்திவிட்டோம். நாட்டு மருந்துதான். நாளுக்கு நாள் முன்னேற்றம்தான். ஒருவர் பிடித்துக்கொள்ள மெல்ல நடப்பார். முந்தைய நாள்தான் வைத்தியர், அப்பாவை பரிசோதித்து நரம்புகள், மூட்டுகள் எல்லாம் ஆரோக்கியமாக உள்ளது என்றார். இன்னும் ஒருபக்கம் முழுமையாக உணர்சிமட்டும் திரும்பவில்லை. ஒரு பக்கத்து உடல் பாரம் வெகுவாக குறைந்துள்ளது. இனும் ஓரிரு வாரங்களில் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இந்த நிலையில் தான் சிவா சண்முக சுந்தர பாபுஜியின் வரவு.

பாபுஜி வரும்போது வீட்டில் அப்பா மட்டும் தனியாக இருந்தார். நான், காலையில் கொஞ்சம் தியானம், பிராணாயாமம், செய்வது வழக்கம். நேற்று ஒரு வேலையாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினால், வாசலில் ஒரு omni van, முன் வராண்டாவில் சில காவி வேஷ்டிகள் , உள்ளே நுழைந்தால், இன்னும் கொஞ்சம் காவிகளுக்கு நடுவே அப்பா நின்றுகொண்டிருக்கிறார். பக்கத்தில் அந்த சாமியார், "கையை தூக்கு... கையை இறக்கு.... காலை ஓதரு...." - கண்களில் மிச்சம் இருந்த தூக்கத்தோடு, என்ன நடக்கிறது என்று புரிந்தும் புரியாமலும் அப்பா அவர் சொன்னதை செய்துகொண்டிருந்தார். கண்களை மூடிக்கொள்ள சொல்லி, கழுத்தில் நெட்டி எடுத்தார். கைகளையும் கால்களயும் பிடித்து பார்த்துவிட்டு, "எல்லாம் நல்ல இருக்கு, நான் எங்க போனாலும் அரைமணி நேரம்தான், treatment -ஐ முடிச்சுடுவேன். இன்னும் பத்து நிமிஷம், உங்க அப்பாவை சரி பண்ணிட்டு கிளம்பிடுவேன்" என்றார்.

நான், தம்பியை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, தியானத்திற்கு சென்றுவிட்டேன்.

சாமியார், அப்பாவை "வா நடக்கலாம்" என்று, வீட்டிற்கு வெளியே அழைத்து சென்று, இப்படி நட, அப்படி நட என்று அதற்கும் இதற்கும் நடக்கவைத்துகொண்டிருந்தார். Hospital -இல் இருந்து வீட்டிற்கு வந்தபின், இப்போது தான் வெளியே வந்திருக்கிறார் என்று ஒருவர் சொல்ல, சாமியார் முகத்தில் பெருமிதம், ''எப்படி!? நான் வந்துதான் உன்னை வெளியே நடக்கவைத்தேன்" என்று சொல்லியும் காட்டினர். "உன் அண்ணன் எங்கே? கூப்பிடு" என்று சொல்ல, "சாமி கும்பிடுகிறான்" என்று சொல்லி இருக்கிறான். அதற்கு "தம்பி, சீக்கிரம் வா, நேரம் ஆகுது, நான் போகனும்" என்று கூப்பிட்டார். த்யனதிற்கும் ப்ராணயாமத்ற்கும் இடையில் வெளிப்பட்ட நான், "நான் வர இன்னும் பத்து நிமிஷம் ஆகும்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டேன். இது அவர்க்கு அவமானமாய் போய்விட்டது போல. அதற்கு பின் அவர் ஏதும் பேசவில்லை. அவசர அவசரமாக புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்த நடையை அப்பா வீட்டிற்கு உள்ளேயே நடந்து கொண்டிருந்தாரே, ஒருபக்கம் இன்னும் உணர்ச்சி வரவில்லையே, அதை பத்து நிமிடத்தில் வரவைத்திருந்தால், அவர் வித்தை தெரிந்தவர்தான் என்று ஒப்புகொள்ளலாம். இவை எல்லாம் பேசுவதற்குள் ஓடிவிட்டார், ஆம் ஓடிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

கழுத்தில் சில ருத்ராட்ச மாலை(கள்), சிவலிங்க doller, பானை வயிறு, நெஞ்சுவரை தூக்கி கட்டிய காவி வேஷ்டி, காவி துண்டு, வெட்டாத முடி, தாடி, நெற்றியில் பட்டை, பெரிதாய் குங்கும போட்டு, பூநூல் (அதன் தத்துவம், இப்போது பல பிராமணர்கு கூட தெரிவதில்லை!) இது தான் இபோதைய பெரும்பாலான சாமியார்களின் வேஷம். இவர்களுக்கு எப்படியும் ஏதாவது ஒரு வித்தியாசமான கலை தெரிந்திருக்கும், இந்த பாபுஜிகு, கொஞ்சம் நரம்பு வித்தை, அதாவது, வர்மகலை. அதுவும் கொஞ்சம்தான். இது போன்றவர்களிடம்தான் நெறைய பேர் போய் விழுகிறார்கள், குறிப்பாக பெண்கள். தயவு செய்து இது போன்ற சாமியார்களை நம்பாதீர்கள். இவர்களும் நம்மை போன்ற மனிதர்கள்தான் என்பதை நம்புங்கள். இவர்களுக்கும் பசிக்கும், மலம் போகும், காய்ச்சல் வரும், இவர்களயும் கொசு கடிக்கும், கனவில் நயன்தாரா வருவாள், எல்லாம் இருக்கும்.

எனக்கு தெரிந்த கடைசி யோகி, காஞ்சி பெரியவர்தான். எந்த யோகிக்கும் தொப்பை இருந்ததில்லை. இப்போது உள்ள யாரும் யோகத்தை கற்றுத்தருவதில்லை. உண்மையான தியானம் கூட இப்போதிருக்கும் பல சாமியார்களுக்கும், மடாதிபதிகளுக்கும் தெரிவதில்லை. அவர்களை பொறுத்தமட்டில் சாமி என்பது ஒரு தொழில். புகழ், பணம், மரியாதை தரும் சொகுசான தொழில். அவ்வளவே.நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

- திருக்குறள், 276.

தந்தை சொல்....

தாயிற்சிறந்த கோவிலும் இல்லை... தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை......

உள்ளங்கை பார்க்க கண்ணாடி தேவையா!! இந்த வரிகளுக்கு விளக்கம் தேவையா!! என்று நீங்கள் நினைக்கலாம். பொதுவாக, நமக்கு வேதாந்தங்களும் தத்துவங்களும் ஆன்மிக உண்மைகளும் இலைமறை, காய்மறையாகவே சொல்லப்பட்டிருகிறது. அதில் இந்த வரிகளும் விதிவிலக்கல்ல.

இந்த உலகத்தில் ஜனிக்கும் ஜீவன் முன்வினை காரணமாக பிறகின்றது. அந்த ஜீவன், தாயின் கர்பப்பையில் இருக்கும் போது அந்த ஜென்மத்தின் வினைகள் ஆரம்பித்திருப்பதில்லை. வினைகள் இல்லாததால் புண்ணிய பாவங்கள் இல்லை. புண்ணிய பாவம் அற்ற ஆத்மா, பரமாத்மாவிற்கு நிகரானது. அப்படி பட்ட தெய்வம் இருபதால்தான் தாயின் கர்பப்பையை கருவறை என்றும் சொல்வார்கள். கோவில் கருவறையை கூட அசுத்தம் செய்யமுடியும், ஆனால் அன்னையின் கருவறையை அப்படி செய்யமுடியாது. இதை குறிபிடுவதுதான், 'தாயிற்சிறந்த கோவில் இல்லை'.

தந்தை சொல் மிக்க மந்திரம்?!

இங்கு தந்தை என்பது சிவபெருமானை குறிக்கிறது . 'நமசிவய' எனும் பஞ்சாச்சர மந்திரம்தான் தந்தை சொல். அந்த பஞ்சாச்சர மந்திரத்தைவிட உயர்ந்த மந்திரம் இல்லை என்பதுதான், 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை'.

பஞ்சாட்சர மந்திரம் எப்படி உயர்வானது என்பதை புரிந்துகொள்ள, மந்திரஜபம், குண்டலனி, இத்யாதிகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும்... அவைகளையும் சொல்கிறேன், பொறுத்திருகள்....

ஜெய் பாதாள பைரவி......

சாயா விருட்ச பட்டை, வேர், பூ, பிசின் இவைகளைக் கொண்டு வந்து நிழலில் பாடமாய் உலர்த்தி இடித்து தூள் செய்து துணியில் வஸ்திரகாயம் செய்து பத்திரபடுதவும். இதை திரிகடிப் பிரமானம்தேனில் குழைத்து காலை மாலை இருவேளையும் சாபிட்டால், நாற்பது நாட்களில் காயசித்தியாகும்!!!! உடலை கத்தியால் வெட்டினால் பிரிந்து கூடும்!!! சாவு கிடையாது!!! இதன் பட்டை வேர் எடுப்பதற்கு முன் அந்த மரத்தடியில் இருந்து ஏழு நாள் வடுக பைரவ மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும்.....

இன்னும் இதன் பட்டை வேர் இவைகளை நிழலில் உலர்த்தி குழித்தைலம் இறக்கி வைத்துக்கொண்டு கருங்குருவி பிச்சு, கண், கரும்பூணை பிச்சு, கண், இவைகளை சுருக்கி கல்வத்திலிட்டு, பச்சை கர்பூராம், புனுகு, கஸ்தூரி, குங்குமப்பூ, இவைகள் வகைக்கு ஒரு குன்றி மணி எடை சேர்த்து தைலம் விட்டரைத்து திலகமிட்டாள் நமது உருவம் பிறர் கண்களுக்கு தெரியாது!!!!! வெற்றிலையில் தடவி பார்த்தல் முன்று காலமும் அறியலாம்!!!!!

ஒரு முள்ளொயை (அப்படி என்றால்???) பிடித்து அதன் வாயினுள் பாதரசம் ஒரு பாலம் விட்டு வாயை தைத்து சிலை மண் செய்து புதைத்து நாற்பது நாள் சென்றபின் எடுத்து பிரித்தால் ரசம் கட்டி மணியாகும். பின் பூ நாகம் அரைத்து மணிக்கு கவசம் செய்து பத்து எருவில் பத்து புடம் போட்டால் பிரகாசமுள்ள மணியாகும். இதை வாயில் அடக்கி வைத்துக்கொண்டு போகித்தால் விந்து விழாது!!!! எத்தனை பெண்களை போகித்தலும் விந்து விழாது!!!!!!

இது பரவாயில்லை...... அம்மாவாசை, அனுச நட்சத்திரம் அப்புறம் இனும் ஏதோ கூடி வரும் நாளில் கருங்கழுதையை கொன்று (பாவம்....) தலையை உடைத்து பார்த்தல் ஒரு கல் இருக்குமாம்!!! மற்றநாளில் மண்டையை உடைத்தால் கல் இருக்காதாம்!!!! அதை வாயில் அடக்கிக்கொண்டால் நாம் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்துபோவோமாம்!!!! அந்த கல்லை தாமிர டப்பியில் தான் வைக்கவேண்டுமாம் இல்லாவிட்டால் அந்த கல்லே கண்ணனுக்கு தெரியாதாம்!!!!

இதே போல் இனொரு நாள், இனொரு நட்சத்திரம் அன்று காட்டுபூனையின் தலையை உடைத்தால் கிடைக்கும் கல்லை வாயில் வைத்துகொண்டால் பூனையாகிவிடுவோமாம்!!!!!


இன்று முட்டாள்கள் தினம் என்பதால் இது எல்லாம் ஏதோ உங்களை முட்டாளாக சொல்கிறேன் என்று நினைகாதீர்கள்...... படிக்க புதியதாய் புத்தகங்கள் வாங்க சென்றபோது கண்ணில் பட்ட சில புத்தகங்களில் இருந்தவைகள் இவை.... மை வித்தைகள், வசிய ரகசியகள், ரசவாத மூலிகைகள், இந்த்ர ஜால விதைகள் என்று நிறைய இது போன்ற புத்தகங்கள் கிடைக்கின்றன.... எல்லாம் விலை ஐம்பதிற்குள்தான்.... இவ்வளவு குறைந்த விலையில் தேவதாவிசயம் முதல் ரசவாதம்வரை அனைத்து ரகசியங்களும் கிடைக்கின்றது....தங்கம் செய்யும் ரகசியங்கள் நிறைந்த ''போகர் 5000'' என்ற நூலை அரசு தடை செய்திருப்பதாக அறிந்தேன்......இவைகளில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை...... எனக்கு தெரிந்த சித்தவைத்தியர் ஒருவரிடம் இது பற்றி விசாரித்தேன், "நிதானமாக ஒரு நாள் எனக்கு தெரிந்த ரகசியகளை சொல்கிறேன்'' என்றார்..... அவர் சொல்லட்டும், உங்களுக்கும் சொல்கிறேன்....... இன்னும்கூட இதை பற்றி ஆராயவேண்டும்......

ஒரு காவலரின் வாக்குமூலம்...

பிரதான சாலை அருகில் இருக்கும் தனி வீடுகள்தான் பெரும்பாலும் கொள்ளையடிக்க தேர்ந்தெடுக்கி்ன்றனர். ஓரிரு நாட்கள் வீட்டை ஆள்மாற்றி ஆள் கண்காணிக்கிறார்கள். வீட்டின் மொத்த ஜன்னல், கதவு, சுற்றி உள்ள புதர்கள், மரங்கள், அவசரத்தில் பதுங்க இண்டு இடுக்குகள், தப்பி ஓடி சாலையை அடையும் சுலபமான வழிகள், என எல்லாம் துப்புரவாக பார்த்துவிடுவார்கள்...

கொள்ளைக்கு நாள் குறித்த அன்று, இரண்டாம் ஆட்டம் படம் பார்க்க சென்றுவிடுவார்கள். படம் முடித்தும் நேராக அந்த வீட்டின் அருகில், முன்பே தேர்தெடுத்த மறைவில் கூடி, தூங்கிவிடுவார்கள்!!! தலைவனாய் செயல்படுபவன் மட்டும் கொஞ்சம் கனமான கல்லை கையில் வைத்துக்கொண்டு தூங்குவான்...

பின் இரவு இரண்டு மணிக்கு மேல் என்பது எந்த ஒரு மனிதனையும் உறக்கம் வெற்றிகொள்ளும் நேரம். அந்த ஆழ்ந்த உறக்கத்தில் அவனின் கைகள் வலுவிழந்து கல் நழுவி விழும். அதுதான் வேட்டைக்கு புறப்படும் நேரம்...

தன் கூட்டாளிகளை எழுப்பிகொண்டு, நேராக அந்த வீட்டின் கதவை தட்டுவார்கள், சிலசமயம் உடைத்தேவிடுவார்கள். உள்ளே சென்றதும் முதலில் ஆண்கள் அனைவரையும் கட்டிவிடுவார்கள். அவர்களின் உயிரை பணயம் வைத்து அந்த வீட்டு பெண்களை -வயது வித்தியாசம் பார்க்காமல் - கற்பழித்துவிடுவார்கள்!!!!

பிறகு அவர்களையும் கட்டிவிட்டு நிதானமாக கொள்ளையடிக்கபடும்.
அந்த குடுபத்திற்கு கொள்ளை போகும் பொருட்களைவிட, குடும்ப மானம் முக்கியமாகிறது. அவர்களுக்குள்ளேயே அழுது ஆற்றிகொள்வார்களேயன்றி போலீஸிற்கு போகமாட்டார்கள், அதற்குதான் அந்த கற்பழிப்புகள்...

இப்படி தன் கண் முன்னாலேயே மகளின் கற்பு சூறையாடப்பட்ட ஒரு தந்தை, கொள்ளை நடந்த சில மணிகளிலேயே, கொள்ளையடித்துபோக வீட்டில் இருந்த நகை பணத்தை மடியில் கட்டிக்கொண்டு துணைக்கு நம்பிகையான சில நண்பர்களுடன் காவல் நிலையம் வந்து அனைத்தையும் மேஜை மேல் கொட்டி, நடந்ததை சொல்லி, '....இதெல்லாம் நீங்களே வெச்சுகோங்கய்யா, எனக்கு அந்தத் தே பயலுவள புடிச்சு குடுத்துருங்க.... அவனுகளை மாறுகால் மாறுகை வாங்கணும்...... அப்போதான் ஆறும்.....' என்றார்.....

இப்படி கொள்ளை அடித்தும் அவர்களின் அடுத்த நடவடிக்கை, ஊரை விட்டு ஓடுவது.... அந்த தந்தையையும் அவரின் நண்பர்களையும் அப்போதே ஜீப்பில் அள்ளி போட்டுக்கொண்டு வெளியூர் பேருந்துநிலையங்களில் தேட, இருவர் மட்டும் அகபட்டார்கள்...
அதற்குபின் சட்டம் தன் கடமையை செய்ததா, அல்லது அந்த தந்தையின் மனம் ஆறியதா என்பது இனொரு நாள் சொல்கிறேன்...
அற்ப பணத்திற்காக உலகின் பார்வைகே வராமல் இப்படியும் சில குடும்பங்கள் சிதைவதை ஜீரணிக்க முடியவில்லை....

மாத பிதா குரு தெய்வம்....


ஏதோ ஒரு காலம்தொட்டு அனர்த்தம் செய்யப்பட்ட வாக்கியங்களில் இதுவும் ஒன்று...


தந்தை குரு தெய்வத்தை எல்லாம் பின்தள்ளி முன்நிறுத்தபடுவது அன்னை. இவளே முதலில் வணங்கவேண்டியவள் என்றேல்லாம் தலைமுறையாக போதிக்கபடுபவை...


அன்னை வணங்கவேண்டியவர்களுள் ஒருத்திதான்.... அதை தப்பென்று சொல்லவில்லை..... ஆனால் இந்த வாக்கியங்கள் நமக்கு உணர்த்துவது வேறொன்றை..... அதை தான் சொல்ல விரும்புகிறேன்...


ஒரு குழந்தை பிறந்ததும் முதலில் உணர்வது தாயை...


அந்த தாய்தான் அக்குழந்தையின் தகப்பான் இவனென்று காட்டுபவள்...


ஒரு நல்ல தகப்பனின் பொறுப்பு அக்குழந்தையை நல்ல ஆசிரியனிடம் கொண்டுசேர்பது...


சிறந்த குருவினால்தான் கடவுளை அடையும் மார்க்கத்தை போதிக்கமுடியும்....


இதைதான் முறையே மாத பிதா குரு தெய்வம் என்று சொல்கிறார்கள்....


மாத பிதா குரு மூவரும் ஒருவனுக்கு சிறந்தவர்களாக அமைய பெற்றால் அவன் சுலபமாக தெய்வத்தை அடையலாம் என்பது தான் இது உணர்த்துகிறது...


தாய்குலத்தின் ஆதரவுக்காக ஏதோ ஒரு காலத்தில் இதன் அர்த்தத்தை மாற்றி வழிவழியாக மனங்களில் பதித்துவிட்டார்கள்....


இதேபோல் இனொரு பழமொழியும் உண்டு.... அதை பின்னர் பார்போம்....


அதற்கு முன் இதன் பொருள் தெரிகிறதா பாருங்கள்....


வைத்தியரிடம் (தமிழில் டாக்டர்!) வந்த ஒருவன் "ஐயா, கோலிரண்டு பற்றி மூவிரண்டு போகையில் ஐந்து தலை நாகம் ஒன்று அழுத்தி கடித்ததையா, என்ன செய்ய? "


அதற்கு வைத்தியர் "பத்துரதன், புத்திரனின், மித்துருவின், சத்துருவின், பத்தினியின், காலை வாங்கி தேய், அது தான் மருந்து"


புரிகிறதா!!!!!

இவன்......

தேடிச்சோறு நினம் தின்னும் பாரதியின் வேடிக்கை மனிதர்களுள் இவனும் ஒருவன்.... இவனின் எண்ணகளும் அனுபவங்களும் நிகழ்வுகளும் நிறைந்த DIARY தான் இது என்று கூறி ஆரம்பித்துவிடலாம்... ஆனால் இதில் ஒரு நாசுக்கான நழுவல் இருப்பது சற்றே ஆழ்ந்த பார்வைக்கு புலப்பட்டுவிடும்...

'எனக்கு எதுவும் தெரியாது, ஏதோ என் மனதில்பட்ட கருத்தை இந்த சபைமுன்வைக்கிறேன்' என்று ஆரம்பித்து இவனின் சுய கருத்துக்களை சொல்லும் நாசுக்கு.... இவனின் கருத்துக்கள் பற்றி ஆதரவான விமர்சனம் வந்தால் வரவேற்கும் அதே சமயம் எதிர்மரையான விமர்சனங்கள் வரும்போது 'பாரதியின் வேடிக்கை மனிதன் தான் நான்...' என்று முன்னமே சொன்னதை கோடிட்டு நழுவிவிடலாம்.....

அப்படியானால் இவனை எப்படி படிப்பது என்று ஆரம்பதிலேயே கேள்விகளுடன் பயணிக்காமல் வெறுமையாய் புதியதாய் இவனுடன் பயணப்பாடுகள்....

'....பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே....' என்ற வேத வாக்கியங்களின் ராகசியகளும்.... மெக்சிகோ சலவைகாரி கதையும்.... சாலையில் சிகப்பு விளக்கை மதிகாதவனின் மேல் உள்ள கோபமும்.... தெருவோர தள்ளுவண்டி கடை கம்பங்கூலும்.... அதை குடிக்கையில் காலை உரசிய நாயில் வாஞ்சையும்... முரட்டு சுபாவத்தை தவிர்க்க முடியாத சக மனிதனின் உள்ளே புதைத்துள்ள பரிவும்.... காதலும்.... கவிதையும்.... காமமும்... சாக்கடையும்... பிணவாடையும்.... அருவருப்பும்... என எதுவும் இங்கு கிடைக்கலாம்..... நிதானமாக பயணியுகள்....