ஒரு காவலரின் வாக்குமூலம்...

பிரதான சாலை அருகில் இருக்கும் தனி வீடுகள்தான் பெரும்பாலும் கொள்ளையடிக்க தேர்ந்தெடுக்கி்ன்றனர். ஓரிரு நாட்கள் வீட்டை ஆள்மாற்றி ஆள் கண்காணிக்கிறார்கள். வீட்டின் மொத்த ஜன்னல், கதவு, சுற்றி உள்ள புதர்கள், மரங்கள், அவசரத்தில் பதுங்க இண்டு இடுக்குகள், தப்பி ஓடி சாலையை அடையும் சுலபமான வழிகள், என எல்லாம் துப்புரவாக பார்த்துவிடுவார்கள்...

கொள்ளைக்கு நாள் குறித்த அன்று, இரண்டாம் ஆட்டம் படம் பார்க்க சென்றுவிடுவார்கள். படம் முடித்தும் நேராக அந்த வீட்டின் அருகில், முன்பே தேர்தெடுத்த மறைவில் கூடி, தூங்கிவிடுவார்கள்!!! தலைவனாய் செயல்படுபவன் மட்டும் கொஞ்சம் கனமான கல்லை கையில் வைத்துக்கொண்டு தூங்குவான்...

பின் இரவு இரண்டு மணிக்கு மேல் என்பது எந்த ஒரு மனிதனையும் உறக்கம் வெற்றிகொள்ளும் நேரம். அந்த ஆழ்ந்த உறக்கத்தில் அவனின் கைகள் வலுவிழந்து கல் நழுவி விழும். அதுதான் வேட்டைக்கு புறப்படும் நேரம்...

தன் கூட்டாளிகளை எழுப்பிகொண்டு, நேராக அந்த வீட்டின் கதவை தட்டுவார்கள், சிலசமயம் உடைத்தேவிடுவார்கள். உள்ளே சென்றதும் முதலில் ஆண்கள் அனைவரையும் கட்டிவிடுவார்கள். அவர்களின் உயிரை பணயம் வைத்து அந்த வீட்டு பெண்களை -வயது வித்தியாசம் பார்க்காமல் - கற்பழித்துவிடுவார்கள்!!!!

பிறகு அவர்களையும் கட்டிவிட்டு நிதானமாக கொள்ளையடிக்கபடும்.
அந்த குடுபத்திற்கு கொள்ளை போகும் பொருட்களைவிட, குடும்ப மானம் முக்கியமாகிறது. அவர்களுக்குள்ளேயே அழுது ஆற்றிகொள்வார்களேயன்றி போலீஸிற்கு போகமாட்டார்கள், அதற்குதான் அந்த கற்பழிப்புகள்...

இப்படி தன் கண் முன்னாலேயே மகளின் கற்பு சூறையாடப்பட்ட ஒரு தந்தை, கொள்ளை நடந்த சில மணிகளிலேயே, கொள்ளையடித்துபோக வீட்டில் இருந்த நகை பணத்தை மடியில் கட்டிக்கொண்டு துணைக்கு நம்பிகையான சில நண்பர்களுடன் காவல் நிலையம் வந்து அனைத்தையும் மேஜை மேல் கொட்டி, நடந்ததை சொல்லி, '....இதெல்லாம் நீங்களே வெச்சுகோங்கய்யா, எனக்கு அந்தத் தே பயலுவள புடிச்சு குடுத்துருங்க.... அவனுகளை மாறுகால் மாறுகை வாங்கணும்...... அப்போதான் ஆறும்.....' என்றார்.....

இப்படி கொள்ளை அடித்தும் அவர்களின் அடுத்த நடவடிக்கை, ஊரை விட்டு ஓடுவது.... அந்த தந்தையையும் அவரின் நண்பர்களையும் அப்போதே ஜீப்பில் அள்ளி போட்டுக்கொண்டு வெளியூர் பேருந்துநிலையங்களில் தேட, இருவர் மட்டும் அகபட்டார்கள்...
அதற்குபின் சட்டம் தன் கடமையை செய்ததா, அல்லது அந்த தந்தையின் மனம் ஆறியதா என்பது இனொரு நாள் சொல்கிறேன்...
அற்ப பணத்திற்காக உலகின் பார்வைகே வராமல் இப்படியும் சில குடும்பங்கள் சிதைவதை ஜீரணிக்க முடியவில்லை....

மாத பிதா குரு தெய்வம்....


ஏதோ ஒரு காலம்தொட்டு அனர்த்தம் செய்யப்பட்ட வாக்கியங்களில் இதுவும் ஒன்று...


தந்தை குரு தெய்வத்தை எல்லாம் பின்தள்ளி முன்நிறுத்தபடுவது அன்னை. இவளே முதலில் வணங்கவேண்டியவள் என்றேல்லாம் தலைமுறையாக போதிக்கபடுபவை...


அன்னை வணங்கவேண்டியவர்களுள் ஒருத்திதான்.... அதை தப்பென்று சொல்லவில்லை..... ஆனால் இந்த வாக்கியங்கள் நமக்கு உணர்த்துவது வேறொன்றை..... அதை தான் சொல்ல விரும்புகிறேன்...


ஒரு குழந்தை பிறந்ததும் முதலில் உணர்வது தாயை...


அந்த தாய்தான் அக்குழந்தையின் தகப்பான் இவனென்று காட்டுபவள்...


ஒரு நல்ல தகப்பனின் பொறுப்பு அக்குழந்தையை நல்ல ஆசிரியனிடம் கொண்டுசேர்பது...


சிறந்த குருவினால்தான் கடவுளை அடையும் மார்க்கத்தை போதிக்கமுடியும்....


இதைதான் முறையே மாத பிதா குரு தெய்வம் என்று சொல்கிறார்கள்....


மாத பிதா குரு மூவரும் ஒருவனுக்கு சிறந்தவர்களாக அமைய பெற்றால் அவன் சுலபமாக தெய்வத்தை அடையலாம் என்பது தான் இது உணர்த்துகிறது...


தாய்குலத்தின் ஆதரவுக்காக ஏதோ ஒரு காலத்தில் இதன் அர்த்தத்தை மாற்றி வழிவழியாக மனங்களில் பதித்துவிட்டார்கள்....


இதேபோல் இனொரு பழமொழியும் உண்டு.... அதை பின்னர் பார்போம்....


அதற்கு முன் இதன் பொருள் தெரிகிறதா பாருங்கள்....


வைத்தியரிடம் (தமிழில் டாக்டர்!) வந்த ஒருவன் "ஐயா, கோலிரண்டு பற்றி மூவிரண்டு போகையில் ஐந்து தலை நாகம் ஒன்று அழுத்தி கடித்ததையா, என்ன செய்ய? "


அதற்கு வைத்தியர் "பத்துரதன், புத்திரனின், மித்துருவின், சத்துருவின், பத்தினியின், காலை வாங்கி தேய், அது தான் மருந்து"


புரிகிறதா!!!!!

இவன்......

தேடிச்சோறு நினம் தின்னும் பாரதியின் வேடிக்கை மனிதர்களுள் இவனும் ஒருவன்.... இவனின் எண்ணகளும் அனுபவங்களும் நிகழ்வுகளும் நிறைந்த DIARY தான் இது என்று கூறி ஆரம்பித்துவிடலாம்... ஆனால் இதில் ஒரு நாசுக்கான நழுவல் இருப்பது சற்றே ஆழ்ந்த பார்வைக்கு புலப்பட்டுவிடும்...

'எனக்கு எதுவும் தெரியாது, ஏதோ என் மனதில்பட்ட கருத்தை இந்த சபைமுன்வைக்கிறேன்' என்று ஆரம்பித்து இவனின் சுய கருத்துக்களை சொல்லும் நாசுக்கு.... இவனின் கருத்துக்கள் பற்றி ஆதரவான விமர்சனம் வந்தால் வரவேற்கும் அதே சமயம் எதிர்மரையான விமர்சனங்கள் வரும்போது 'பாரதியின் வேடிக்கை மனிதன் தான் நான்...' என்று முன்னமே சொன்னதை கோடிட்டு நழுவிவிடலாம்.....

அப்படியானால் இவனை எப்படி படிப்பது என்று ஆரம்பதிலேயே கேள்விகளுடன் பயணிக்காமல் வெறுமையாய் புதியதாய் இவனுடன் பயணப்பாடுகள்....

'....பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே....' என்ற வேத வாக்கியங்களின் ராகசியகளும்.... மெக்சிகோ சலவைகாரி கதையும்.... சாலையில் சிகப்பு விளக்கை மதிகாதவனின் மேல் உள்ள கோபமும்.... தெருவோர தள்ளுவண்டி கடை கம்பங்கூலும்.... அதை குடிக்கையில் காலை உரசிய நாயில் வாஞ்சையும்... முரட்டு சுபாவத்தை தவிர்க்க முடியாத சக மனிதனின் உள்ளே புதைத்துள்ள பரிவும்.... காதலும்.... கவிதையும்.... காமமும்... சாக்கடையும்... பிணவாடையும்.... அருவருப்பும்... என எதுவும் இங்கு கிடைக்கலாம்..... நிதானமாக பயணியுகள்....