சலூன் கடைகாரர்...

ஒரு ஆரம்பபள்ளியில் இரு சிறுவர்கள், நாலும் சொச்ச வயதுகள்...
உணவு இடைவேளையில் அவர்களின் சம்பாசனை...
"டேய்... எனக்கு ஒரு டவுட் டா..."
"என்ற?"
"ஆய் போன நமக்கு ஆயா கழுவி விடறாங்க.. ஆயா ஆய் போன யாருடா கழுவி விடுவாங்க??"
"அவகளுக்கு எல்லாம் ஹெட் மிஸ் கழுவுவாங்கடா..."

எனக்கும் இப்படிஎல்லாம் சந்தேகங்கள் வந்ததுண்டு...
நமக்கு டாக்டர் வைத்தியம் பார்க்கிறார், அவருக்கு ஏதும் வந்தால் வேறு நல்ல டாக்டர் இடம் செல்வாரா? நமக்கு அளவு எடுக்கும் தையல்காறர்க்கு யார் அளவு எடுப்பார்கள்? இப்படி பல... ஆனால், எங்கள் ஊர் சலூன் காரர் தனக்கு எப்படி கிட்டிங் செய்வார் என்று சந்தேகமே வந்ததில்லை...

ஐந்தடி இரண்டு அங்குல உயரத்தில் இரண்டு அங்குலம் அவரின் வழுகை பளீரிடும். இன்று வரை அவரின் பெயர் எனக்கு தெரியாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். என்ன ராசியோ, அவருக்கும் பைரவனுக்கும் ஆகாது. தெருவில் நடந்து செல்லும்பொழுது எபோழுதும் கையில் நாய் விரட்ட ஒரு குச்சி இருக்கும், மந்திரகோல் போல.

முடிவெட்ட அமர்த்தும், நம் மீது ஒரு வெள்ளை துணி படரும், அதன் இரு நுனிகள் நம் பின்னங்கழுத்தில் முடிசிடுவதர்க்கு முன், சட்டை காலரை பின்னோக்கி இழுக்கும்போதுதான் நம் சட்டையின் முதல் பொத்தானை அவர் கழட்டியது தெரியும்.

சர்பத்தின் சீறலுடன் வெளிவரும் நீர் துளிகளால் (கோடை காலத்தில் அதன் சுகமே தனி!!) தலை முடி முழுக்க நினைத்து பின் அழகாக சீவிவிடுவார். அவரின் தழுவலுக்கு அடங்கி முடிகற்றைகள் அழகான வடிவத்திற்கு வந்துவிடும், அதை பார்த்தபின் இதுவே போதும் என்று எண்ண தோன்றும். அந்த சமயத்தில்தான் நமகே நமக்கு மட்டும் கேட்கும் வண்ணம் 'எப்படி வேணும்?' என்பார்.

அவர் தலையை ஒத்தவர்கள் வந்தால், அவர் கண்களில் ஒரு குதுகலம் படர்வதை உற்று பார்த்தல் காணலாம்.
அப்படியான ஒருவர் "என்னப்பா, இந்த தலைக்கும் இருவத்தஞ்சு ருவா தானா?"
"அதுவே கம்மி, தேடி தேடி வெட்ரோம்ல..." என்று குசும்புடன் பதில் வரும்.

2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் ஆரம்ப நாட்கள் என்று நினைக்கிறேன். 'சிவாஜி' படத்தை வெள்ளித்திரையில் பார்பதற்காக ஊரே காத்துகொண்டிருந்த ஒரு நாள். மாலையின் ஆரம்ப நிமிடங்களில் அவரின் கடைக்கு சென்றேன். அந்த நேரத்திலேயே புறப்பட ஆயதமாகிகொண்டிருந்தார்!! என்னை பார்த்ததும் கொஞ்சம் யோசனையுடன் "ஒரு கல்யாணத்துக்கு போகணும், கடைய மூடலாம்னு..." என்று இழுத்தவர் "சரி உக்காருங்க, முடிச்சுட்டே போலாம்"

என முடியை சிதரடிதுகொண்டே பேசினார் "நாளைக்கு நம்ம மச்சுனனுக்கு கல்யாணம். மாமன் நானே லேட்டா போன சொந்தகாரங்க ஏதும் பேசுவாக. அதன் நேரத்துலையே போலாம்னு... நம்ம போய் ஏதும் பண்ணவேண்டாம்... இருந்தாலும் நாம இருந்த ஒரு மரியாதை ..." இப்படியாக அந்த அவசரத்திலும், அவசரம் இல்லாமல் என சிரசை சீர் செய்தார்.

பேச்சும் வேலையும் முடிததும் எபோதும் போல இருபத்தைந்தை நீட்டினேன். வாங்கி வைத்துகொண்டவர், "இபோ இது போதும், அடுத்ததடவைல இருந்து முப்பது குடுங்க, வேலை எல்லாம் ஏறிடுசுங்க.."
"அதுகென்னங்க, இப்பவே முப்பதா வாங்கிக்கங்க, அஞ்சு ரூபால என்ன ஆயிடபோகுது!!"
"பரவால அடுத்த டைம் பாத்துக்கலாம்"
...இப்படி இருவரும் சில பரவாயில்லை பரிமாற்றத்திற்கு பிறகு சங்கடத்துடன் அவர் பெற்றுக்கொண்டார்.

இரண்டு நாட்களுக்கு பின், திருமணம் முடிந்து மண்டபத்திலேயே ஹார்ட் அட்டாக் இல் அவர் இறந்துவிட்ட செய்தி வந்தது.

இன்று அவர் கடையை அவரின் மைத்துனன் நடத்துகின்றார். கடையில், ஒரு ஓரத்தில், சிறிய விளக்கு வெளிச்சத்தில் மாலையுடன் புகைப்படமாய் அவரை பார்க்க மனதை ஏதோ அழுத்துவதால் அங்கு போவதில்லை.