சர்ப்பம்....

அதிக மனித உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கும் பிற உயிரிணங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த உயிரிணம், பாம்பு. வருடத்திற்கு சராசரி பத்தாயிரம் பேர் உயிரிழக்கின்றார்கள். முதல் இடம் பிடித்தது எது என்று யோசித்து வையுங்கள், கடைசியில் சொல்கிறேன்.

உலகில் இதுவரை மூவாயிரம் வகையான பாம்புகளை இனம் கண்டிருக்கிறார்கள். அவைகளில் ஐம்பது வகைகள் மட்டுமே உயிரை பறிக்கும் அளவு விஷம் கொண்டவை.


அதிக விஷம் கொண்டவைகளில் ' Inland Taipan ' வகை பாம்பின் விஷம் ஒரே சமயத்தில் நூறு மனித உயிர்களை குடிக்கவல்லது. இதை விட அதிக விஷம் கொண்ட ஒரு கடல் பாம்பு உண்டு, (அதன் விஷம் ஆயிரம் மனித உயிரை பறிப்பதற்கு போதுமானது). ஆனால் அது மனித நடமாட்டம் இல்லாத கடலின் ஆழத்தில் வாழ்கிறது. மீறி கடித்தாலும் அவ்வளவு சீக்கிரம் விஷத்தை பாய்ச்சுவதில்லை. நல்ல வேளை இவைகள் நம் நாட்டில் இல்லை. ஆஸ்திரேலியாவின் வறண்ட வெளிகளில் வாழும் Taipan வகை பாம்புகளை விட்டு நம் நாட்டு பாம்புகளை பார்ப்போம்.


நம் நாட்டு பாம்புகளில் கொடிய விஷமுடையது நாகம் என்று எண்ணிக்கொண்டிருந்தால் , அது தவறு. உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் இரண்டாம் இடம் பிடிப்பது நம்மூர் எண்ணை விரியன் எனும் எட்டடி விரியன் . கருமை நிறம் கொண்ட அதன் உடல் மீது எட்டு வெள்ளை நிற கோடுகள் இருக்கும். எட்டடி விரியன் என்பதால், அது எட்டு அடி நீளம் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். அதிக பட்சம் ஐந்து அடி தான் வளரும். அது கடித்தால், மனிதன் எட்டடி நகர்வதற்க்குள் உயிர் பிரிந்துவிடுமாம். அதனால் தான் அதற்க்கு எட்டடி விரியன் என்று பெயர். இதனிடம் 25% மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது. (Taipan கடிக்கு 15% மட்டும்!!)


அடுத்து ரத்த மண்டலி, அனலி(மலையாளம்) என்றெல்லாம் அழைக்கப்படும் சுரட்டை. இது கடித்தால் அரை மணியில் கண், காது, மூக்கு, பல் இடுக்கு, நகக்கண், வியர்வை துவாரம் வரை எல்லா துவாரங்களிலும் ரத்தம் கசியும், பின் மரணம் தான். நாகன் வகையறாக்கள் கடித்தால் உடல் நீலநிறமாகும்.


பாம்பு விஷங்கள் இரண்டு வகை மட்டுமே உண்டு. நாகம் வகை பாம்புகளின் விஷம் ரத்தத்தை கட்டியாக்கி விடும். விரியன் வகைகளின் விஷம் ரத்தத்தை இன்னும் நீர்த்து ரத்த அளவை அதிகரிக்கும், அது தான் கண், காது, என வியர்வை துவாரம் வரை கசிய செய்கிறது.


அலோபதி மருத்துவத்தில் நாகம் வகை பாம்பு கடிக்கு விரியன் வகை பாம்பின் விஷம் கொடுத்து ரத்தம் கட்டியாகாமல் தடுக்கிறார்கள். விரியன் வகை கடிக்கு நாகத்தின் விஷம் மருந்தாகிறது. இது தான் விஷத்தை விஷத்தால் எடுப்பது. பாம்பு கடிக்கு அதன் விஷமே மருந்தாகிறது. இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கடித்த பாம்பு இன்ன வகை என்று கண்டிப்பாக மருத்துவருக்கு தெரிய வேண்டும், மாற்றி மருந்து கொடுத்தால் எதிர்வினை ஆகிவிடும். இதற்கு நம் கிராமப்புற நாட்டு மருந்து சிக்கல் இல்லாதது, சுலபமானது. இன்னும் கூட சில கிராமங்களில் விஷக்கடி வைத்தியர்கள் இருக்கிறார்கள்.


இவர்களிடம் உள்ள ஒரு கொள்கை (பிடிவாதம்) என்னவென்றால், வீட்டு வாசலில் அல்லது கோவிலில் வைத்து பாம்பு கடித்தால் வைத்தியம் பார்க்கமாட்டார்கள். அந்த இடங்களில் பாம்பு கடிக்காதாம், மீறி கடித்தால் அவை வரம் வாங்கி வந்திருக்குமாம்.



பாம்பு கடிக்கு கொஞ்சம் சுலபமான நாட்டு வைத்தியம்.


முருங்கை!!!


பாம்பு கடித்த இடத்திற்கு கொஞ்சம் மேலே கயிற்றால் இறுக்கக்கட்டி கடித்த இடத்தில் தாட்சணியம் இல்லாமல் கீறி ரத்தத்தை வெளியேற விடவேண்டும், திரைப்படங்களில் வருவது போல, விஷத்தை உறிஞ்ச முயற்சிக்காதீர்கள், உங்கள் வாயில் சொத்தை பல், பலகீனமான ஈர்கள் இருப்பின், உங்களுக்கே வினையாகிவிடும். இந்த சமயத்தில் முருங்கை மர பட்டையை கடிபட்டவருக்கு கொடுத்து வாயில் இட்டு மென்று சாரை குடிக்கலாம். பட்டையை வாயிலேயே கடித்து வைத்துக்கொள்ளவேண்டும். முருங்கை கீரையை அரைத்து கடிவாயில் வைத்து கட்டிவிடவேண்டும். கடித்து இருபத்து நான்கு மணி நேரத்திற்கு வெறும் சோறு, உடன் வேகவைத்த முருகை இலை தவிர வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. தூக்கம் அறவே கூடாது. அடுத்த 48 நாட்களுக்கு, கத்திரிக்காய், நார்தங்காய், நல்லெண்னை, கருவாடு, கருப்பட்டி, தட்டபயறு, உருளை கிழங்கு, சேனை கிழங்கு கூடாது, மற்றும் அசைவம் கூடவேகூடாது .

இருப்பினும், ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனையுடன் எதையும் செய்யவும்...

என்னை பொருத்த வரை எந்த பாம்பும் முகம் பார்த்து பழி வாங்குவது திரைப்படங்களில்தான். மனிதனால் பாம்பு இறந்தாலும் பாம்பினால் மனிதன் இறந்தாலும் எனக்கு நினைவிற்கு வருவது கீழே உள்ள கவிதை தான். அதற்கு முன் இந்த கட்டுரையின் துவக்கத்தில் கேட்டிருந்த கேள்விக்கு பதில் தெரிந்ததா? அதற்கு விடை கொசு!!! காலரா கொசு!!! அதனால் வருடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இறக்கிறார்களாம்!!!


பாம்பு...

சீறுவோம் படமெடுப்போம்...

கொல்ல துணிந்ததில்லை

என்றேனும் பயத்தில்

அப்படியும் நிகழ்வதுண்டு....

எங்களை போல்தான்

மனிதர்களும்...

அவர்களுக்கும் அது

தெரியும் தான் - தெரிந்தும்

இருவரும் இதுவரை

பயத்தை வென்றதில்லை.....