தேள்...

மாயை பற்றி எழுதலாம் என்ற சிந்தனையுடன் உலாவிகொண்டிருந்தபோது, வீட்டின் முன், தெருவில் நிதானமாக ஒரு தேள் சாவதானமாக சென்றுகொண்டிருந்தது கண்டேன். சர்ப்பம் பற்றி எழுதியதிலிருந்தே அடிக்கடி கனவில் வந்துகொண்டிருந்த தேள், இன்று நேரிலேயே வந்துவிட்டது!! தன்னை பற்றி எழுதவில்லை என்ற ஆதங்கம் போல...!!!!

வெளிச்சம் குறைந்திருந்த மாலை பொழுது. தெரு விளக்கின் வெளிச்சத்தில் நிதானமாக நடந்துகொண்டிருந்தது. நல்ல கருமை. முன்பக்கம் நண்டிற்கு இருப்பதுபோல் நல்ல அகன்ற இடிக்கி போன்ற இரண்டு கொடுக்குகள். தேளில் இது நட்டுவாகிலி வகை. எப்படியும் ஏழு அங்குலம் நீளம் இருக்கும். காடுகளில் வாழும் இந்த வகை, ஒரு அடி நீளம் வரை கூட வளருமாம்!!!

பார்ப்பதற்கு கர்னகொடூரமாய் இருந்தாலும் இது ஒரு அசமந்த பிராணி! சாதாரணமாய் திரியும் செந்தேள், மரதேள், போன்றவைபோல் இது சட்டேன்று கொட்டிவிடாது. தன் முன்பக்க கொடுக்குகளால் வசமாக பிடிப்பு கிடைத்தபின்பு இடம் பார்த்து தன் வால்பக்க கொடுக்கால் ஓங்கி கொட்டும். இதற்குள் அதனை உதறிக்கொண்டு அப்பால் போய்விடலாம்!

இருப்பினும் இது ஆள் நடமாட்டம் உள்ள தெரு, மொத்த தெருவிற்கும் ஒரே விளக்குதான். வெளிச்சம் இல்லாத பகுதியில் இதை யாரேனும் தெரியாமல் மிதித்துவிட்டால்...!!! விபரீத சந்தர்பங்களின் சாத்தியங்களை தவிர்க்க அதனை தொந்தரவு செய்வது தவிர வேறு வழி தோன்றவில்லை.

ஒரு இடுக்கியின் உதவியால் அதன் வாலைப்பற்றி ஆள் நடமாட்டம் அற்ற புதர்வரை இழுத்து சென்றேன். அதன் வால் பகுதி, பெரிய பாசிமணிகளை கோர்த்து போல் மொளுமொளுபாக இருப்பதால் தூக்கிச்சென்றால், நழுவி விழும் வாய்புகள் அதிகமாதலால் தரையோடு இழுத்து சென்றேன். (இது போன்ற தேள்களை கொன்று புதைத்து சில நாட்கள் கழித்து புதைத்த இடத்தை தோண்டி பார்த்தல் அதன் மற்றபகுதிகள் மண் தின்று இந்த வால் பகுதிமட்டும் பாசிகளாக கிடைக்கும், அதனை நூலில் கோர்த்து குழந்தைகளுக்கு அணிவிப்பார்கள், திருஷ்டிக்காக!!!) அதன் கொடுக்கை பற்றியவுடன், அதிலிருந்து விடுபட அது எடுத்த முயற்சிகள் அலாதி, உள்ளகை நீளமாய் உள்ள அதன் பலம் ஆச்சரியபடவைத்தது!!!

பாம்பு கடிபோல் தேள் கடிக்கு இதுதான் மருந்து என சொல்ல இயலாது. காரணம், தேளின் விஷம் நம் ஒவ்வொருவரின் உடல்வாகை பொருத்தும் கடுமையாகவோ சாதாரனமாகவோ செயல்படும். தேள் கடிபட்டவர்க்கு பித்த உடம்பா, வாத உடம்பா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து நேரத்தை வீணடிக்காமல் மருத்துவரிடம் செல்லவது சாலச்சிறந்தது.

உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தை சொல்லுகிறேன்.

தேளின் வால் பகுதியில், கொட்டுகை தவிர்த்து மற்ற பாசி போன்ற பகுதிகளை நசுக்கினால் வெள்ளை நிறத்தில் பசை போல் இருக்கும். அதுதான், அந்தந்த தேள் கடிக்கு மருந்து!!! கடித்த தேளை பிடித்து கொன்று இந்த பசை போன்ற வஸ்துவை கடிவாயில் பூசினால் வலி குறையும், விஷம் இறங்கும்.

இருப்பினும், ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனையுடன் எதையும் செய்யவும்...

தேளை பற்றி ஒரு கதையை சொல்லி முடிக்கிறேன்...

தேள் ஒன்று கங்கையில் தத்தளித்து சென்றது. ஒரு சந்நியாசி அதை வெளியே எடுத்துவிட முயன்றார். அவரை கொட்டிவிட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. பல முறை இப்படி நிகழ்த்து. இதை கண்ட ஒருவன், "அது கொட்டுவது வலிக்கவில்லையா!! அறிவில்லாதது, அதை காப்பாற்ற நினைக்கும் உன்னை கொட்டுகிறதே, அதை ஏன் எடுக்கவேண்டும்?" என்றான். அதற்க்கு அந்த சந்நியாசி, "உயிர் போகும் தருவாயிலும் அறிவில்லாத அதுவே தன் சுபாவத்தை விடவில்லை, அறிவுள்ள மனிதனாகிய நான் மட்டும் என் சுபாவமாகிய ஜீவகாருண்யத்தை எதற்கு விடவேண்டும்?!" என்றார்....

1 Response to "தேள்..."

  1. Shakthiprabha says:
    November 5, 2009 at 10:36 PM

    //"உயிர் போகும் தருவாயிலும் அறிவில்லாத அதுவே தன் சுபாவத்தை விடவில்லை, அறிவுள்ள மனிதனாகிய நான் மட்டும் என் சுபாவமாகிய ஜீவகாருண்யத்தை எதற்கு விடவேண்டும்?!"//

    படிக்க நன்றாய் இருக்கிறது :)

Post a Comment